டைரக்டராக வேண்டிய சித்தார்த் நடிகரானது எப்படி?

எம்.பி.ஏ படிப்பை முடித்ததும், சினிமாவில் இயக்குனராக வேண்டுமென்ற எண்ணம் சித்தார்த்துக்கு தலை ஓங்கியது.

பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்த சித்தார்த், குடும்ப நண்பரான பி.சி.ஸ்ரீராம் மூலம் தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். பெற்றோரும் அவரின் விருப்பத்திற்கு தடையாக இருக்கவில்லை.

பி.சி.ஸ்ரீராம் மூலம் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக தனது பணியை தொடங்கியுள்ளார். நடிப்பதை கனவிலும் நினைக்காத சித்தார்த் டைரக்டராக வேண்டும் என்பதையே முதன்மையாகக் கொண்டிருந்திருக்கிறார். சித்தார்த் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

அந்த சமயத்தில், ‘பாய்ஸ்’ படத்திற்கு இயக்குனர் ஷங்கர் புதுமுகங்களை தேடி வருகிறார் என்பதை அறிந்த, எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி, சித்தார்த்தை பரிந்துரை செய்துள்ளார். ஆடிஷனில் தேர்வான சித்தார்த் ‘பாய்ஸ்’ படத்தில் நடித்தார். ஜெனிலியா, நகுல், தமன், பரத் ஆகியோருடன் சித்தார்த்தும் அறிமுகமானார். முதல் படமே சித்தார்த்துக்கு நல்ல தொடக்கமாக இருந்தது.

 

பிரம்மாண்ட இயக்குனர், இசைப்புயல் என அமர்களமாக அமைந்தது. ‘பாய்ஸ்’ படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானாலும் வெற்றிப்படமாகவே கொண்டாடப்பட்டது. சித்தார்த் தமிழில் அறிமுகமானாலும், ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில்தான் நல்ல வரவேற்பு இருந்தது. தெலுங்கில் சித்தார்த் நடித்த படங்களே தமிழில், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என ஜெயம் ரவி நடிப்பில் ரீமேக் செய்து வெற்றியடைந்தது.

சித்தார்த் நடித்த சில படங்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதில் மிகவும் ஃபேமஸான படம் அமீர்கானுடன் நடித்த ‘ரங் தே பசந்தி’. உதயம் என்எச் 4 படத்திற்கு பிறகு தமிழில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

செப்டம்பர் மாதம் வெளியான சித்தா படம், பெண் குழந்தைகளுக்கு நடக்கும் சமூக அவலத்தை சொல்லும், நல்ல விழிப்புணர்வு படமாக இருந்தது. சித்தா படத்திற்காக சித்தார்த்திற்கு நல்ல பாராட்டும், வரவேற்பும் கிடைத்துள்ளது. எத்தனை படங்கள் நடித்தாலும், 20 வருடங்களாக சினிமாவில் தொடர்ந்து இயங்குவதற்கு முக்கிய காரணம் அன்று இயக்குனர் மணிரத்தினத்தின் அசிஸ்டெண்டாக பணிபுரிந்ததுதான் என கூறியுள்ளார். அவரிடம் பணிபுரிந்த போது, கிடைத்த அனுபவம் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் என்று பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...