காணத்தவறாதீர்….விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.!

சதுரகிரி மலையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம் இத்தலத்தின் சிறப்புகள்.

அகத்தியர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்துள்ளார். அவர் அமைத்த லிங்கத்தைத் தான் சுந்தரமூர்த்தி லிங்கம் என்கின்றனர். அவர் தங்கிய மலையின் பெயர் கும்பமலை. அவர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்தர் சித்தர் பூஜித்து வந்தார்.

sundara mahalingam
sundara mahalingam

அதனால் தான் அந்த லிங்கத்திற்கு சுந்தரமூர்த்தி லிங்கம் என்ற பெயர் வந்தது. அருளை வழங்குவது சுந்தரமகாலிங்கம். பொருளை வழங்குவது சுந்தரமூர்த்தி லிங்கம் என்றும் கூறுவர். சதுரகிரி கோவிலின் நுழைவாயிலில் இந்த லிங்கம் உள்ளது. நள்ளிரவு 12 மணி அளவில் இங்கு சித்தர்கள் தரிசிக்க வருவதால் அதன் அருகே யாரும் செல்வதில்லையாம்.

இங்குள்ள அம்பிகையைப் பற்றி பலருக்கும் தெரியாது. அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.

பார்வதி பூஜித்த லிங்கம்

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள்.

Parvathi Poojitha Lingam
Parvathi Poojitha Lingam

மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்.

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை

 

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.

சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

எப்படி செல்வது?

மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அல்லது, மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் – செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள்.

ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:

காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews