ஆடி மாத ஸ்பெஷல் கும்மாயம்… உடலுக்கு வலு சேர்க்கும் இந்த கும்மாயம் செய்வது எப்படி?

ஆடி கும்மாயம் அல்லது ஆடி கூழ் என்று அழைக்கப்படும் இந்த இனிப்பு வகையானது செட்டிநாட்டின் பாரம்பரிய இனிப்பு வகைகளுள் ஒன்று. பொதுவாக திருமணம் ஆன முதல் வருடத்தில் வரும் ஆடி மாதத்தில் பெண்களை பிறந்த வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். முன்பெல்லாம் புகுந்த வீட்டிலிருந்து அழைத்து வரும் தங்கள் வீட்டு மகள்களுக்கு எலும்பு, கர்ப்பப்பை போன்றவை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக இந்த ஆடி கும்மாயம் என்ற இனிப்பு செய்து கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.

ஆடிக் கும்மாயத்திற்கான மாவினை தயாரித்து வைத்து விட்டால் இந்த இனிப்பினை மிக சுலபமாக செய்துவிடலாம்.

images 5 1

ஆடி கும்மாயம் மாவு தயாரிக்கும் முறை:
  • உளுத்தம் பருப்பு – ஒரு கிலோ
  • பாசிப்பருப்பு – ஒரு ஆழாக்கு
  • பச்சரிசி – அரை ஆழாக்கு

உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, பச்சரிசி இந்த மூன்றையும் தனித்தனியாக வாசம் வரும் வரை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த பருப்புகளை ஆற வைத்து விடவும்.

ஆறிய பின் மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த மாவானது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

இப்பொழுது இந்த மாவினை பயன்படுத்தி கும்மாயம் செய்யும் முறையினை பார்க்கலாம்.

கும்மாயம் செய்ய தேவையான பொருட்கள்:
  • கும்மாய மாவு – 1 ஆழாக்கு
  • கருப்பட்டி – ஒரு ஆழாக்கு
  • வெல்லம் – அரை ஆழாக்கு
  • சீனி – கால் ஆழாக்கு
  • நெய் – 200 மில்லி லிட்டர்
  • தண்ணீர் – மூன்று டம்ளர்
ஆடிக் கும்மாயம் செய்யும் முறை:

ஏற்கனவே தயாரித்து வைத்த மாவினை குறைந்த தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வெள்ளம் மற்றும் கருப்பட்டியை தூளாக்கி தண்ணீர் விட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி ஆற விடவும்.

பாகில் மாவை கொட்டி கட்டிப்படாமல் கரைக்கவும்.

இப்பொழுது இந்த மாவினை அடுப்பில் வைத்து கிளறவும்.

மாவு இறுகி வரும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு கிளறவும்.

மாவு நன்றாக சுருண்டு வரும் பொழுது இறக்கி விடவும்.

அவ்வளவுதான் சுவையான சத்தான கும்மாயம் தயார்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews