15 நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாத தக்காளி தொக்கு ரெசிபி!

தக்காளி தற்பொழுது மலிவாக கிடைக்கும் நிலையில் நாவில் எச்சியூரும் தக்காளி தொக்குகளை செய்து நாம் பதப்படுத்திக் கொள்ளலாம். இந்த தக்காளி தொக்கு நாம் சூடான சாதம் அல்லது இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மிக அருமையாக இருக்கும். இந்த தக்காளி தொக்கு செய்வதற்கு 15 நிமிடங்களே போதுமானது, மேலும் இந்தத் தொக்கு 10 முதல் 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் அதே சுவையில் இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

தக்காளி- அரை கிலோ

பூண்டு- 100 கிராம்

புளி -எலுமிச்சை பல அளவு

வத்தல் – 10

இஞ்சி – சிறு துண்டு

மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி

குழம்பு மசாலா – மூன்று தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 4 தேக்கரண்டி

கடுகு- சிறிதளவு

கருவேப்பிலை- சிறிதளவு

பெருங்காய பொடி- மூன்று சிட்டிகை

செய்முறை:-

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பத்து வத்தலை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். மீண்டும் அதே எண்ணெயில் பூண்டை வறுத்து எடுத்துக் கொள்ளவும். செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் தொக்கு இன்னும் சுவையாக அமையும்.

மிதமான சூட்டில் பூண்டு வறுத்தால் போதும் நிறம் மாற வேண்டிய அவசியம் இல்லை. அடுத்ததாக அதை எண்ணெயில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளிகளை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தோல் சீவிய சிறு துண்டு இஞ்சி மற்றும் புளி சேர்த்துக் கொள்ளலாம்.

தக்காளியை லேசாக வதக்கினால் போதும். இப்பொழுது நாம் வதக்கி வைத்திருக்கும் பூண்டு, வத்தல், தக்காளி, இஞ்சி இவை அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க அவசியம் இல்லை.

இப்பொழுது அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதனுடன் பெருங்காய பொடி கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

அதன் பின்பு நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி கலவையை அந்த கடாயில் சேர்த்துக் கொள்ளவும். இதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், குழம்பு மசாலா அனைத்தையும் இதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இனிப்பு பிடிக்காதவர்களுக்கு காரசாரமான உப்பு கொழுக்கட்டை ரெசிபி!

அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து சுவை பார்த்தபின் அந்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து அதை மூடி வைத்து 10 முதல் 15நிமிடங்கள் கொதிக்க விடவும்.

மிதமான தீயில் தொக்கு தயார் செய்யும் பொழுது தொக்கு மேலும் சுவையாக இருக்கும். 15நிமிடங்கள் கழித்து நாம் பார்க்கும் பொழுது தொக்கிலிருந்து எண்ணெய் பிரிந்து தனியாக வர தொடங்கும். இப்பொழுது நமக்கு சுவையான தக்காளி தொக்கு தயார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews