ஆடு ஜீவிதம் விமர்சனம்!.. பிரித்விராஜ் மற்றும் அமலா பால் நடிப்பு எப்படி இருக்கு?.. நாவல் அளவுக்கு இருக்கா?..

மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதி கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ள ஆடு ஜீவிதம் திரைப்படம் பல ஆண்டுகால உழைப்பை உள்வாங்கி இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது.

நடிகர் பிரித்விராஜ் இந்தப் படத்தில் சவுதி அரேபியாவில் பாலைவனத்தில் சிக்கித் தவித்து தப்பித்து வீடு திரும்பிய நஜீப் எனும் மலையாளியை தனது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.

ஆடு ஜீவிதம் விமர்சனம்:

பென்யமின் எழுதிய மிகப்பெரிய நாவலின் ஹைலைட்ஸ்களை மட்டுமே கொண்டு ஒரு படமாக இயக்குனர் பிளஸ்ஸி இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார். பிரித்திவிராஜ் ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்துமே தமிழ் மற்றும் மலையாளத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மரியான் படத்தின் ஆப்பிரிக்காவின் பாலைவனத்தில் சிக்கிக்கொள்ளும் நடிகர் தனுஷ் அங்கிருந்து எப்படி தப்பித்து வருகிறார் என்பதை படமாக்கி இருப்பார்கள். இந்த நாவலின் அடிப்படையில் தான் அந்த கதையே உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

கேரளாவில் இருந்து நிறைமாத கர்ப்பிணியை வீட்டில் விட்டுவிட்டு சம்பாதிப்பதற்காக சவுதி அரேபியாவுக்கு செல்லும் நஜீப். விமானத்திலிருந்து இறங்கியதும் அங்கிருந்து ஒரு வாகனத்தின் மூலம் பாலைவனத்துக்கு கொண்டு சென்று ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு அனுப்பப்படுகிறார்.

சரியாக சோறு தண்ணீர் எதுவும் கொடுக்கப்படாமல், ஆடுகளை மேய்க்கவும் அவற்றில் இருந்து பாலை கறந்து கொடுக்கவும், வேலைக்கு வைத்த ஆட்கள் குறிப்பிட்டு சொல்லும் ஆட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் இப்படியான வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், உணவு மற்றும் போதிய குடிநீர் இல்லாமல் குளிக்க முடியாமல், பல மாதங்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ளும் நஜீப் எப்படியாவது உயிர் பிழைத்து தனது சொந்த ஊருக்கு சென்று மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வெளிநாட்டினர் ஒருத்தருடன் அங்கிருந்து தப்பித்து செல்ல நினைக்கிறார்.

கண்ணுக்கெட்டிய தூரம் கிராமமே தெரியாத பாலைவனத்தில் பல மையில் தூரம் நடந்தும் பாலைவன மணலில் விழுந்து உருண்டும் அவர் அவதிப்படும் காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கண்கலங்க வைத்து விடும்.

பல ஆண்டுகளாக உருவானாலும் ஒளிப்பதிவாளரின் கேமரா நேர்த்தி மற்றும் பிரம்மாண்ட பொருட்செலவு காரணமாக படம் பழைய படமாக இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நிச்சயம் பிருத்விராஜின் மெனக்கெடலுக்காகவும் அவர் போட்டுள்ள உழைப்புக்காகவும் இந்த படத்தை பார்க்கலாம்.

ஆடுஜீவிதம் – ஆச்சர்யம்!

ரேட்டிங் – 4/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...