ரகுவரன் நடிச்ச நேரத்தில் பிரகாஷ் ராஜ் பாத்த வேலை.. பல வருஷம் கழிச்சு தெரிய வந்த உண்மை…

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகராக இருந்து மறைந்தவர் ரகுவரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ரகுவரன், தனது ரியாக்ஷன்கள் மூலமே கதாபாத்திரத்தின் நடிப்பை கடத்தக் கூடிய ஆற்றல் படைத்தவர். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுவரன், பின்னர் ஹீரோவாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து, ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தது, அவரது நடிப்பையே வேறொரு பரிணாமத்தில் காட்டி இருந்தது. அது மட்டுமில்லாமல், பார்ப்பவர்களுக்கு ஒரு வித பயத்தை கொடுக்கும் வகையிலும் பாட்ஷா படத்தில் வரும் ஆண்டனி கதாபாத்திரம் அமைந்திருந்தது. ரஜினிகாந்தின் திரை பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்த பாட்ஷா, ரகுவரனுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.

இதே போல, காதலன், முதல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து ரசிகர்களையும் அவர் வெகுவாக கவர்ந்திருந்தார். இதற்கு மத்தியில், முகவரி, அமர்க்களம், திருமலை, யாரடி நீ மோகினி உள்ளிட்ட திரைப்படங்களில் ரகுவரன் ஏற்ற குணச்சித்திர கதாபாத்திரங்கள், இவரா வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு வேறுபட்ட வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இன்னும் நிறைய திரைப்படங்கள் நடித்து புகழ் அடைந்திருக்க வேண்டிய ரகுவரன், தனது 49 வது வயதிலேயே கடந்த 2008 ஆம் ஆண்டு உடல்நலம் சரியில்லாததால் மறைந்தார். தமிழில் அவரது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்ற அளவுக்கு கொஞ்ச காலத்திலேயே நடித்து மறைந்து விட்டார் ரகுவரன்.

இந்த நிலையில், ரகுவரன் மற்றும் பிரகாஷ் ராஜ் இணைந்து நடித்த படத்தில் நடந்த சம்பவம் குறித்து இயக்குனர் தயா செந்தில் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இவர் இயக்கிய தயா என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் ரகுவரன் இணைந்து நடித்திருந்தனர். இதன் படப்பிடிப்பின் போது முதலில் பிரகாஷ் ராஜ் காட்சிகளை எடுத்து விட்டு அவரை கிளம்ப சொல்லி விடுவாராம் இயக்குனர் தயா செந்தில். ஆனால், கிளம்பி போகாமல் அங்கேயே மறைந்து நின்று ரகுவரன் நடிக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பாராம்.

அவர் வசனம் பேசும் காட்சிகள் மற்றும் நடிப்பு வெளிப்படுவது பற்றி பார்ப்பதற்காக அங்கேயே நிற்கும் பிரகாஷ் ராஜ், அந்த நாளிலும் வழக்கம் போல ரகுவரனை ரசித்து கொண்டிருந்துள்ளார். அப்படி ரகுவரனுக்கு வசனமே இல்லாத காட்சி ஒன்று படமாக்கப்பட, அவரின் முகம் அருகே கேமரா வந்ததும் இயக்குனர் சொல்லாத விஷயத்தை காட்சியில் உடல் பாவனையாக வெளிப்படுத்தினாராம் ரகுவரன்.

இதனை யாருமே எதிர்பார்க்காத சூழலில் பலரும் இதனைக் கண்டு பிரம்மித்து போயினர். அப்போது ஸ்பாட்டே அமைதியாக இருக்க, மறைந்து நின்று பார்த்த பிரகாஷ் ராஜ், தொடையில் தட்டி ‘ரகுவரன் பின்னிட்டான்’ என மிரண்டு விட்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.