பிரதமர் மோடியின் சோலார் மின் திட்டம்… மானியத்துடன் 300 யூனிட் இலவச மின்சாரம்… மேலும் பல முக்கிய தகவல்கள் இதோ…

பிரதமர் மோடி அவர்கள் மக்களின் நலனுக்காக மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்திற்கு ‘ பி. எம். சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து சூர்ய சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதே இத்திட்டம் ஆகும். 75000 கோடி ருபாய் முதலீட்டில், மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம் நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் மின் திட்டத்தை கொண்டு சேர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சூர்ய எரிசக்திக்கான சோலார் பேனல்களை வீட்டின் மேற்கூரையில் அமைப்பதற்கான திட்டப்பணியை பொறுத்து மத்திய அரசு மானியம் வழங்கும். அதாவது 2 கிலோவாட் திறன் கொண்ட அமைப்பிற்கு 60%மானியமும், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு 40%மானியம் கிடைக்கும்.

அதன்படி 3 கிலோவாட்டுக்கு ரூ. 78000 மானியமும், 2 கிலோவாட்டுக்கு ரூ. 60000 மானியமும், 1 கிலோவாட்டுக்கு ரூ. 30000 மானியமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தங்கள் வீடுகளில் சோலார் சிஸ்டம் வைத்திருக்கும் நுகர்வோருக்கு இந்த மானியம் பொருந்தாது.

இந்த சூர்ய மின் திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், முதலில் www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் மின் விநியோக நிறுவனத்தை தேர்வு செய்த பின் உங்கள் மின் நுகர்வோர் எண், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு உங்கள் உள்ளூர் விநியோக நிறுவனத்திடம் இருந்து உங்கள் கோரிக்கைக்கான ஒப்புதல் கிடைக்கும்.

ஒப்புதல் பெற்ற பிறகு, அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் விநியோகஸ்தர்கள் உதவியுடன் வீட்டின் மேற்கூரையில் சோலார் பேனல்களை நிறுவலாம். அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் நிறுவனங்களின் பட்டியலைக் காண https://pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று பார்வையிடலாம்.

இத்திட்டத்திற்காக மானியம் வழங்குவதோடு மத்திய அரசு வங்கி கடன் உதவியும் செய்து தருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒரு கோடி குடும்பங்கள் பயன்பெறுவதுடன் சூர்ய சக்தி சோலார் பேனல்களின் உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு வழிவகுக்கும். இதன் மூலம் நம் நாட்டில் உள்ள 17 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.