சிறப்பு கட்டுரைகள்

தேசபக்தியை தூண்டும் தமிழ் சினிமா பாடல்கள்!!!

ஆகஸ்ட் 15 நம் தாய் திருநாடு அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற நாள், நம் பாரத தேசத்தின் சுதந்திர தின நாள். 1947 ஆம் ஆண்டு பல தலைவர்களின் போராட்டத்தாலும் தியாகத்தாலும் நாம் ஆங்கிலேய ஆட்சியை ஒழித்து சுதந்திர காற்றை சுவாசித்தோம். இந்த ஆண்டு நம் பாரத தேசத்தின் 77வது சுதந்திர தினம் ஆகும்.

விடுதலைப் போராட்டத்தின் போது துண்டு பிரசுரங்கள், பொதுக்கூட்டங்கள், நாடகங்கள், பாடல்கள் என பல்வேறு வழிகளில் மக்களுக்கு சுதந்திர உணர்வை நம் சுதந்திர போராட்ட வீரர்கள் விதைத்தார்கள். இதில் பாடல்கள் மற்றவைகளை விட எளிதில் அனைத்து மக்களிடமும் சென்று சேர்ந்தது. இன்றும் கட்டுரைகள், பேச்சுக்களை விட பாடல்கள் எளிதில் அனைத்து மக்களிடமும் தேச உணர்வை தூண்டும் விதத்தில் உள்ளது. அவ்விதம் தமிழ் திரையுலகில் இடம் பெற்ற தேச உணர்வை தூண்டும் சில தேசபக்தி பாடல்களை பார்க்கலாம்.

1. கப்பலோட்டிய தமிழன்:

1961 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் ஜெமினி கணேசன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் கப்பலோட்டிய தமிழன். இந்த திரைப்படம் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் படமாக விளங்கியது. இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்கள் ஆகும். இதில் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” “வந்தே மாதரம் என்போம்” போன்ற பாடல்கள் தேசபக்தியை வளர்க்கும் விதமாக அமைந்தது.

2. ரோஜா:

1992 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான ரோஜா திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரியில் வெளியான “தமிழா தமிழா நாளை நம் நாடே” எனும் பாடல் தேசபக்தி உணர்வை தூண்டக்கூடிய ஒரு சிறந்த பாடல் ஆகும்.

3. ஜெய்ஹிந்த்:

ஜெய்ஹிந்த் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் வித்தியாசாகர் இசையில் வைரமுத்து அவர்களின் வரிகளில் வெளியான “தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்” என்ற பாடல் மிகவும் பிரபலமான தேச பக்தி பாடல் ஆகும். இன்றளவிலும் பள்ளி ,கல்லூரி, அரசு அலுவலகங்களில் முக்கிய தினங்களில் ஒலிக்கப்படும் பாடலாக இந்த பாடல் இருந்து வருகிறது.

4. பாரத விலாஸ்:

1973 வது வருடம் சிவாஜி கணேசன் மற்றும் கே.ஆர். விஜயா அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் பாரத விலாஸ். இந்த திரைப்படம் பல்வேறு மொழி, கலாச்சாரம், மாநிலம் ஆகியவற்றால் வேறுபட்ட மக்கள் ஒரே குடியிருப்பில் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்பதை பற்றிய படம். நம் இந்திய தேசத்தின் ஒற்றுமை உணர்வை குறிக்கும் “இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு” என்ற பாடல் மிகச்சிறந்த தேசத்தின் ஒற்றுமை உணர்வை குறிக்கின்ற பாடல் ஆகும்.

5. வந்தே மாதரம்:

1997 ஆம் ஆண்டு நம் இந்திய தேசத்தின் 50 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான பாடல் “தாய் மண்ணே வணக்கம்” என்ற பாடல். ஏ ஆர் ரகுமான் அவர்களின் இசையில் வைரமுத்து அவர்கள் வரி எழுத “தாய் மண்ணே வணக்கம்” என்ற ஆல்பம் 50 ஆவது சுதந்திர தின விழாவிற்காக வெளியிடப்பட்டது. இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் நம்மை அறியாமலேயே புல்லரிக்கச் செய்யும் விதமாக தேச பக்தி தூண்டும் விதமாக இந்த பாடல் உள்ளது.

Published by
Sowmiya

Recent Posts