செய்திகள்

UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..

மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உயர்கல்வியில் புதிய நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்த நடைமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யுஜிசி-யின் புதிய கல்விக் கொள்கை நெறிமுறைகள் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை – ஊக்கத்தொகை – கல்விக் கட்டணச் சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள்!

இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த ஆளுநர்! இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநரே நியமிக்கலாம் என்று #UGC தன் விதிகளைத் திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை?

பல்கலைக்கழகங்களில் இனி இவங்களும் துணைவேந்தராகலாம்.. யுஜிசி -யின் புதிய நெறிமுறையால் குழப்பம்

தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதைக் காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மைக் கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் #UGC_Draft_Regulations!

இதனை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம்!‘” இவ்வாறு அந்தப் பதிவில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.