உடல்நலம்

அழகிய தோட்டமும் ஆரோக்கியமான வாழ்வும்.. தேசிய தோட்டக்கலை உடற்பயிற்சி தினம்.. ஜூன் 6!

ஒவ்வொரு வீட்டையும் அழகாக்குவது அதில் உள்ள கட்டடக்கலை, வண்ணப் பூச்சு, அதன் உள் கட்டிட அமைப்பு, அலங்காரப் பொருட்கள், விலை உயர்ந்த வீட்டு உபயோகப் பொருட்கள் என்று நினைப்பது தவறு.. இவை அனைத்தையும் விட ஒரு வீட்டிற்கு அழகு சேர்ப்பது அந்த வீட்டில் அமைந்துள்ள தோட்டம் தான்.

பெரும்பாலான மக்கள் எத்தனை வேலைப் பளு வந்தாலும் தங்கள் வீட்டை சுற்றி அழகிய தோட்டம் அமைக்கவோ,  வீட்டில் போதிய இடமில்லை என்றால் மாடித்தோட்டம் அமைத்து அழகு படுத்திடவோ தவறுவதில்லை. தோட்டம் என்பது உடல் மற்றும் மன நலன் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.

தினமும் உடற்பயிற்சி நிலைய கூடத்தில் பணத்தையும் நேரத்தையும் செலவிட்டு நாம் உடற்பயிற்சி செய்வதை விட நம் வீட்டுத் தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவு செய்தால் நம் மனம் அமைதி அடைவதோடு நம் உடல் நலனும் பாதுகாக்கப்படுகிறது.

தோட்டக்கலை மிகச் சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. கை, கால், இடுப்பு, முட்டி என உடலின் பல பாகங்களுக்கு ஒரே நேரத்தில் உடற்பயிற்சி செய்ய இந்த தோட்டக்கலை உதவுகிறது.

தோட்டக்கலையில் ஈடுபடும் பொழுது உடலில் ஏற்படும் அதிகப்படியான வியர்வை நம் உடலில் உள்ள தேவையற்ற குளுக்கோஸ்களை, கொழுப்புகளை எரித்திட பெரும் அளவு உதவி புரிகிறது.

புதிதாக தோட்டக்கலையில் ஈடுபடுவோர் உடனடியாக குனிந்து நிமிருவது அதிக எடைகளை தூக்குவது என்றில்லாமல் முதலில் சிறிய நடைப்பயிற்சியை மேற்கொண்டு விட்டு பிறகு தோட்ட வேலைகளில் ஈடுபடலாம்.

குடும்பத்தினருடன் ஒன்றாய் சேர்ந்து தோட்ட வேலையை பேசியபடியே செய்தால் நம் மனம் அமைதி அடைவதோடு அந்த நாளுக்குத் தேவையான புத்துணர்ச்சியும் நமக்கு அளித்திடுகிறது.

தோட்டக்கலையின் அருமை பலருக்கும் புரியத் தொடங்கி விட்டது. பலரும் தன்னை தோட்டக்கலையில் ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.  இடப்பற்றாக்குறை என்பது பெரிய விஷயமாக தோட்டக்கலையில் இருப்பதில்லை. பெருநகரங்களில் சிறிதளவு மாடியில் இடமிருந்தாலே போதும் தமக்குத் தேவையான காய்கறிகளை தோட்டம் அமைத்து தாமே விளைவித்து அறுவடை செய்து மகிழ்ச்சி காணும் இளைய சமுதாயங்கள் அதிகரித்து வருகிறார்கள். 

இந்த தோட்டக்கலை உடற்பயிற்சி சார்ந்த விஷயமாக இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 6ம் தேதி தேசிய தோட்டக்கலை உடற்பயிற்சி தினமாக கொண்டாடப்படுகிறது.

Published by
Sowmiya

Recent Posts