முருகனுக்கு வள்ளியம்மை தந்த தினை மாவினால் செய்த இனிப்பு கொழுக்கட்டை -பாரம்பரிய சமையல்

முருகன் வள்ளியின் அழகில் மயங்கி அவளை மணக்க முதியவர் வேடங்கொண்டு வள்ளியின் குடிசைக்கு செல்லும்போது தினை மாவும், தேனும் தந்ததாய் புராணங்கள் சொல்கின்றது. தினை அரிசி பழங்காலத்திலிருந்தே நம்முடைய புழக்கத்தில் இருந்துவரும் அரிசி வகைகளுள் ஒன்று. நாம் பயன்படுத்த மறந்து போன சிறுதானிய வகையினுள் ஒன்றான தினையைக் கொண்டு பொங்கல், கொழுக்கட்டை, உப்புமா, சோறு என பல வகை உணவு வகைகளைத் தயார் செய்ய முடியும்.தினை கொழுக்கட்டை சத்து நிறைந்ததும், சுவையானதும் கூட…

தேவையான பொருட்கள்

தினை அரிசி – 250 கிராம்

கருப்பட்டி (அ) வெல்லம் – 100 கிராம்

தண்ணீர் – 1/8 டம்ளர்

உப்பு – மிகவும் சிறிதளவு (ஒரு பிஞ்ச்)

ஏலக்காய் – 4 எண்ணம்

தேங்காய் – ¼ மூடி

செய்முறை..

தினை அரிசியை வெறும் வாணலியில் போட்டு நன்கு வறுக்கவும். அரிசியின் நிறம் மாறி வறுத்த வாசனை வந்ததும் இறக்கி ஆற விடவும். ஆறிய தினை அரிசியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

கருப்பட்டி/வெல்லத்தினை சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஏலக்காயை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அரைத்த தினை அரிசியுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.

அடிகனமான பாத்திரத்தில் தூளாக்கிய கருப்பட்டியைப் போட்டு 1/8 டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.கருப்பட்டி கரைசல் கொதித்தவுடன் இறக்கி வடிட்டி தினை அரிசி மாவில் ஊற்றவும்.இக்கலவையை நன்கு ஒரு சேரக் கிளறவும்.பின் அதனை கொழுக்கட்டைகளாகப் பிடித்து கொழுக்கட்டைகளை இட்லி பானையில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.

சுவையான தினை இனிப்பு கொழுக்கட்டை தயார். வெல்லம் சேர்த்திருப்பதால் இரும்பு சத்து கிடைக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews