செய்வினை கோளாறா…? குழந்தை பாக்கியம் இல்லையா…? அப்படின்னா இந்த அம்மனை வழிபடுங்க..!

திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் போகும் சாலையில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த கிராமம் முப்பந்தல். இங்கு சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம் முப்பந்தல் இசக்கி அம்மன்.

சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் தங்களது சாம்ராஜ்யத்தை சிறப்பாக பரப்பி ஆட்சி செய்து வந்தனர். அவ்வப்போது அவர்களுக்குள் சண்டை வரும். அப்போதெல்லாம் நிறைய புலவர்களும், பெரியோர்களும் இப்படி சண்டை எல்லாம் போடாமல் சமாதானமாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைப்பார்கள்.

அவற்றை எல்லாம் கேட்டுக் கொண்டு பல நேரங்களில் இவர்கள் ஒற்றுமையாக இருந்துள்ளனர். தமிழ் மூதாட்டி ஒளவையார் பல மன்னர்களுடன் தனது நல்லிணக்கமான தொடர்பை வைத்து இருந்தார். மன்னர்கள் அவ்வப்போது வழிதவறும்போதும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் திகைத்து நிற்கும் போதும் அவர்களை வழிநடத்திச் சென்றவர் ஒளவையார்.

அப்படி தான் இந்த மூன்று வேந்தர்களுக்கும் இனி சண்டை போடக்கூடாது. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஒரு பந்தல் அமைத்து நிழல் தந்து அமரச் செய்து, உணவருந்தி இளைப்பாறச் செய்த ஊருக்கு முப்பந்தல் என்று பெயர்.

இந்த அழகான ஊரில் தான் இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த ஊருக்கு அம்மன் எப்படி வந்தார் என்பதற்கும் ஒரு கதை உள்ளது. முப்பந்தல் அருகில் பழவூர் உள்ளது. அங்கு இசக்கி என்ற அழகான பெண் செல்வ வளத்துடன் வளர்ந்து வந்தாள்.

அவள் மீது விருப்பம் கொண்ட ஒருவன் இருந்தான். அவன் நல்லவன் கிடையாது. ஆனாலும் இவளது செல்வத்தை அபகரித்து விட எண்ணினான். அந்தப் பெண்ணுடன் நல்லவன் போல பழகுகிறான். பழகியதும் அவளை நம்ப வைக்கிறான். நீ என்னுடன் வா. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஆசை வார்த்தை கூறுகிறான்.

அவளும் இவனை நம்பி செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு இவனைப் பின்தொடர்கிறாள். அவர்கள் செல்லும் வழியில் ஒரு காடு வருகிறது. அந்தக் காட்டின் நடுவில் அவன் அவளது தலையில் ஒரு கல்லைப் போட்டுக் கொன்று விட்டு செல்வங்களை எல்லாம் எடுத்துக் கொள்கிறான்.

அப்படி அவன் தொடர்ந்து காட்டு வழியாக செல்லும் போது பாம்பு ஒன்று தீண்டி அவனும் இறந்து விடுகிறான். இவர்கள் இருவரும் மேல் உலகத்துக்குச் செல்கின்றனர்;. இவன் மேல் இசக்கிக்கோ அளவு கடந்த கோபம். என்னை நம்ப வைத்து துரோகம் செய்து விட்டானே என்று. அது இறந்த பிறகும் தீரவில்லை.

இருவரும் மேலே செல்லும்போது தெய்வ அம்சம் பொருந்திய இசக்கியை சிவபெருமான் பார்க்கிறார். அவளும் சுவாமி, எனக்கு ஒரு வரம் கொடுக்க வேண்டும் என்கிறாள். என்ன வரம் வேண்டும். கேள் என்ற சிவபெருமானிடம், சுவாமி எனக்கு காதலன் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டான்.

ஆனால் அவன் என் கையால் சாகவில்லை. அவனை நானே கொல்ல வேண்டும். அதற்காக எங்கள் இருவரையும் பூலோகத்தில் மீண்டும் பிறக்க வையுங்கள் என்று கேட்கிறார். அப்படியே தந்தேன் என்று வரம் கொடுக்கிறார் சுவாமி.

இருவரும் பூலோகத்தில் பிறக்கின்றனர். இசக்கி அவனை எப்படிக் கொல்வது என்று சிந்திக்கிறார். கள்ளிச்செடியைக் குழந்தை வடிவில் மாற்றி நேராக காதலன் வீட்டுக்குச் செல்கிறாள். நீ என்னைக் கல்யாணம் பண்ணி விட்டு ஏமாற்றி விட்டாய். என்னோட குழந்தையையும், என்னையும் காப்பாற்ற வேண்டும் என்று நியாயம் கேட்கிறாள். இதற்கு அவனும் முடியாது. இது என் குழந்தை கிடையாது என்று அவளை நிராகரிக்கிறான். இது ஊர் பஞ்சாயத்துக்குச் செல்கிறது. பெரியவர்கள் அவனிடம் நியாயம் கேட்க… அவனும் மறுப்பு தெரிவிக்கிறான்.

அந்த சமயத்தில் இசக்கியின் இடுப்பில் இருந்த குழந்தை இறங்கி வந்து அவனை அப்பா என்று அழைக்கிறது. இது பெரியவர்களிடத்து அதிர்ச்சியைத் தருகிறது. இவன் தான் அப்பா என்பதை உறுதி செய்கின்றனர். தொடர்ந்து இருவரையும் ஒரு அறைக்குள் போட்டு பூட்டி வைக்கின்றனர். இவர்கள் எப்படியும் சமாதானம் செய்து கொண்டு வெளியே வரட்டும் என்று சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இதுதான் சமயம் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த இசக்கி அந்த அறைக்குள்ளேயே விஸ்வரூபம் எடுத்து அவனைக் கொல்கிறாள். அப்படியும் ஆத்திரம் தீராத அவள் அந்தப் பகுதியிலேயே அலைந்து கொண்டு வருகிறாள். அப்போது முப்பந்தல் கிராமத்தின் அருகே வரும்போது ஒளவைப்பாட்டி பார்த்து விடுகிறாள்.

அப்போது அவளை ஒளவைப்பாட்டி சமாதானம் செய்து அந்த இடத்திலேயே அமர வைத்து சாந்தப்படுத்துகிறாள். அந்த இடத்தில் இசக்கி அம்மனுக்கும் கோவில் உருவானது இப்படித்தான். இந்தக் கோவிலில் ஒளவைப் பிராட்டிக்கும் தனி சந்நிதி உள்ளது.

Muppanthal Isakki Amman
Muppanthal Isakki Amman

இசக்கி என்றால் இயக்குபவள் என்றும், இசைவித்து நம்மை வளர்ப்பவள் என்றும் பொருள். இயக்குபவள் என்றால் பார்வதியின் பிம்பமாக இருந்து அருள்சக்தியை மக்களுக்குத் தந்து இயக்கி அருள்புரிபவள். தன்னை நம்பி வருபவர்களுக்கு இசைந்து அருள்புரிபவள் என்பதால் இசக்கி என்றும் பெயர் பெற்றாள்.

அப்படிப்பட்ட இசக்கி அம்மனுக்கு இனி நீ இப்பகுதி மக்களுக்கு அருள்புரிந்து அவர்களுக்கு காவல் தெய்வமாக இருப்பாயாக என்று ஆசிர்வாதம் வழங்கினாள்.

இந்த அம்பிகையை நாம் வழிபாடு செய்தால் சீக்கிரமாக நமக்குக் குழந்தை பேறு கிடைக்கும். குழந்தையோடு காட்சி தரும் அம்மன் ஆதலால் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இந்த அம்மனை வேண்டி வழிபட குழந்தைப் பாக்கியம் பெறுவர். அதே போல திருமணத் தடை, செய்வினை, கோளாறு போன்ற பிரச்சனைகளும் இங்கு வந்து அம்மனை வேண்டி வழிபடுவதால் நீங்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews