எம்ஜிஆர் – ஜெயலலிதா – விஜயகாந்த்.. மூன்று ஆளுமைகளின் மறைவிலும் இருந்த ஒரு ஒற்றுமை..

சினிமாவில் நடித்து மெல்ல மெல்ல அதில் கிடைத்த புகழின் மூலம் அரசியலுக்கு வந்த தமிழ் சினிமா பிரபலங்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால், அதில் ஒரு கட்டத்திற்கு மேல் கடந்து நிலைத்து நின்ற ஆளுமைகள் சிலர் தான். அதில் மிக முக்கியமான ஒருவர் என்றால் எம்ஜிஆரை சொல்லலாம். இன்று திரையுலகில் இருந்து பலரும் அரசியலுக்கு வர விதை போட்டதே எம்ஜிஆர் தான்.

வெறுமென சினிமாவில் கிடைத்த புகழால் லாபம் பார்க்க வேண்டுமென அரசியலில் இறங்காமல், கடைகோடி தமிழக மக்கள் வரை தனது நலத்திட்டங்கள் சென்றடைய வழி செய்தார் எம்ஜிஆர். தமிழக அரசியலில் மூன்று முறை முதல்வரான எம்ஜிஆர், 1987 ஆம் ஆண்டு தனது 70 வது வயதில் காலமானார். இவரைத் தொடர்ந்து அதிமுக கட்சியை வழிநடத்தி அதில் வெற்றி கண்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் சினிமாவில் இருந்து வந்தவர் தான்.

எம்ஜிஆரை மிஞ்சும் அளவுக்கு ஆட்சி நடத்திய ஜெயலலிதா, இரும்பு பெண்மணி என்றும் அறியப்பட்டார். அப்படி இருக்கையில் கடந்த 2016 ஆம் ஆண்டு திடீரென ஜெயலலிதாவின் உடல்நிலையில் பிரச்சனை ஏற்பட, அவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அதன் மூலம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல், அதே 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி இயற்கை எய்தினார் ஜெயலலிதா.

இதற்கடுத்து 71 வது வயதில் மரணம் அடைந்துள்ளார் கேப்டன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த். தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த விஜயகாந்த், தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியல் தலைவராக உருவெடுத்தார். தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றி பெற்ற விஜயகாந்த், அடுத்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக மாறினார்.

இதனால் விரைவில் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார் என்றும் பலர் கூறினர். ஆனால், பல சூழ்ச்சிகளில் சிக்கி விஜயகாந்த் அரசியலும் உடைய, அவரது உடல்நிலையும் மோசமடைய தொடங்கியது. அப்படி இருக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், மறைந்துள்ளார். விஜயகாந்த் போன்ற ஒரு நல்ல மனிதரின் மறைவு, அவரால் வாழ்வு பெற்ற பலரையும் நொறுக்கி உள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் வந்து விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். நாளை அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசியலில் இருந்து சினிமா வந்த ஆளுமைகளான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய மூவரின் மறைவிலும் ஒரு ஒற்றுமை உள்ளது. அவர்கள் சினிமா கலைஞர்கள் என்பதை தாண்டி மூன்று பேருமே டிசம்பர் மாதத்தில் தான் இயற்கை எய்தினார்கள். டிசம்பர் 24 ஆம் தேதி எம்ஜிஆரும், டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதாவும், டிசம்பர் 28 ஆம் தேதியான இன்று (28.12.2023) விஜயகாந்தும் காலமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.