கண்டபடி திட்டியவருக்கும் கைமாறு செய்த பொன்மனச் செம்மல்.. இருந்தாலும் இப்படி ஒரு இரக்க குணமா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்.. கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் என்பதற்கு எப்படி ஓர் உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார் என்று தெரியும். தான் இளமையில் பட்ட கஷ்டங்களின் விளைவால் அனைவருக்கும் உதவும் இரக்க குணம் அவருக்கு இயல்பாகவே அவர் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது.

இல்லை என்று வந்தவர்களுக்கும் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்து இன்றும் மக்கள் மனங்களில் இதய தெய்வமாகக் குடிகொண்டிருக்கிறார் எம்.ஜி.ஆர். மேலும் அவர் தன்னை விமர்சிப்பவர்களைப் பற்றி கோபமோ, பதிலோ எதுவும் கொடுக்கமாட்டார். ஏனெனில் அவர் பார்க்காத வறுமையும் இல்லை, பணமும் இல்லை. எனவே வாழ்வின் அனைத்து நிலைகளையும் கடந்து வந்தவர் என்பதால் மிகுந்த அனுசரிப்புக் குணம் உண்டு.

1970களில் சசிக்குமார் என்கிற ஒரு நடிகர் இருந்தார். பாரத விலாஸ், ராஜபார்ட் ரங்கதுரை, காசேதான் கடவுளே, அரங்கேற்றம் என பல படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தீவிர சிவாஜி ரசிகர். சிவாஜி ரசிகர் மன்ற பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். இவர் சிவாஜிக்கு ஆதரவாக மேடைகளில் பேசும்போது எம்.ஜி.ஆரை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்வார்.

என்னால அந்தப் பாட்ட பாட முடியாது விட்டுருங்க.. எம்.எஸ்.வி கேட்டும் பாட மறுத்த டி.எம்.எஸ்

ஒருமுறை வீட்டில் நடந்த தீ விபத்தில் சிக்கி சசிக்குமார் படுகாயமடைந்தார். சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் அப்போது, அவரை பார்க்க எம்.ஜி.ஆர் சென்றார். உடலின் 90 சதவீதம் வெந்துபோன நிலையில் அவருக்கு நினைவு மட்டும் இருந்தது.

வந்தது எம்.ஜி.ஆர் என்று தெரிந்ததும் ‘உங்களை எப்படி விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால், என்னை பார்க்க நீங்கள் வந்திருக்கிறீர்கள்’ என சொல்லிய அவரின் கண்களில் நீர் ஆறாக வழிந்தது. ‘இப்போ அதுக்கு இதெல்லாம். உனக்கு சரியாகிவிடும்’ என ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்த மருத்துவர்களிடம் ‘சசிக்குமாருக்கு சிறந்த சிகிச்சையை கொடுங்கள்’ என சொல்லிவிட்டுப் போனார் எம்.ஜி.ஆர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி சசிக்குமார் மரணமடைந்தார்.

இதேபோல் பத்திரிகையாளர் ஒருவரும் எம்.ஜி.ஆரின் படங்களை கண்டபடி விமர்சித்து எழுதுவார். ஒருமுறை அவர் குடிக்கு அடிமையாகி போதையில் நடுரோட்டில் விழுந்து கிடக்க அவ்வழியே வந்த எம்.ஜி.ஆர் அவரை அடையாளங்கண்டு மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் குடியிலிருந்து மீண்ட பின்னரும் அவர் எம்.ஜி.ஆரை விமர்சித்தே எழுதி வந்தார். ஒருமுறை அவர் நோய்முற்றி இறக்கும் தருவாயில் இருந்த பொழுது அவரைச் சந்திக்கச் சென்ற எம்.ஜி.ஆர் அவர் நெஞ்சில் எழுதியிருந்தைதைப் பார்த்து நெகிழ்ந்து போனாராம். அது என்ன தெரியுமா இந்த உயிர் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என்று அதில் எழுதியிருந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews