சிவாஜி படத்தில் அறிமுகம்.. ரஜினியின் ‘பைரவி’யில் முக்கிய வேடம்.. மலையாளத்தை தாண்டி தமிழிலும் ஜெயித்த நாயகன்..

கடந்த பல வருடங்களாக மலையாளத்தில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் தமிழிலும் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. தற்போதைய சூப்பர் ஸ்டார் மோகன்லால், மம்முட்டி ஆகியோர் தற்போதும் சில தமிழ் படங்களில் நடித்து வருகின்றனர்

அந்த வகையில் கடந்த 1970 களில் மலையாள திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர் சுதீர் தமிழிலும் சில படங்கள் நடித்துள்ளார். முதல் முதலாக அவர் சிவாஜி கணேசன் நடித்த ’ராமன் எத்தனை ராமனடி’ என்ற திரைப்படத்தில் தான் தமிழில் அறிமுகமானார். அதற்கு முன்பே அவர் பல மலையாள படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கொடுத்தது இந்த படம் தான். இந்த படத்தில் அவர் கோபி என்ற கேரக்டரில் கிட்டத்தட்ட படம் முழுவதும் வரும் ஒரு பாசிட்டிவான கேரக்டரில் நடித்திருப்பார்

இதனையடுத்து ரஜினிகாந்த் நடித்த ’பைரவி’ என்ற திரைப்படத்தில் நடிகர் சுதீர் நடித்தார். ரஜினிகாந்த் முதல் முதலாக ஹீரோவாக நடித்த இந்த படத்தில் இவர்  மாணிக்கம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். சுருளிராஜன் தம்பியாகவும், கீதாவின் அண்ணனாகவும் இவர் நடித்திருந்த நிலையில் இவர்தான் இந்த படத்தில் உள்ள சஸ்பென்ஸ் நிகழ்வுக்கு காரணமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த ’நீயா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிறு வேடம் தான் என்றாலும் அவர் நடிப்பில் கலக்கி இருப்பார். தேவதை, சூலம், சொன்னா நம்ப மாட்டீங்க, கல்யாணம் ஒரு கால்கட்டு போன்ற படங்களில் நடித்தார் சுதீர். அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு அதாவது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஷாம் மற்றும் த்ரிஷா நடித்த ’லேசா லேசா’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே இருந்தாலும் இவர் மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுடன் மலையாள திரை உலகின் முன்னணி நடிகராக இருந்தார். குறிப்பாக ’செம்பரத்தி’ என்ற மலையாள திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு கேரள மாநிலத்தின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது.

1969 ஆம் ஆண்டு திரையுலகத்திற்கு வந்த சுதீர், 2004 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக காலமானார். தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் பல நல்ல கேரக்டர்களில் நடித்து பெயர் பெற்ற சுதிர் படங்கள் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews