கட்டாயம் கவனிங்க…! பௌர்ணமியுடன் வருகிறது சந்திரகிரகணம்…. என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது..?

இன்று (28.10.2023) வரும் பௌர்ணமி மிக முக்கியமான நாள். இந்த நாள் சந்திரகிரகணம் வருவதால் வீட்டில் பௌர்ணமி பூஜை எப்போது செய்யலாம் என்று பார்ப்போம்.

இந்த மாதம் வரும் பௌர்ணமி மிகவும் விசேஷமானது. அன்று தான் சந்திரபகவானின் சாபம் முழுமையாகத் தீர்ந்து 16 கலைகளுடன் முழுமையாக புதுப்பொலிவுடன் தோன்றினார். நவக்கிரகங்களுக்கு உரிய தானம் அரிசி என்பதால் அன்று சிவலிங்கத்துக்கு காய்கறிகள் மற்றும் அன்னத்தை வைத்து அன்னாபிஷேகம் செய்கிறார்கள்.

அன்றைய நாள் சிவபெருமானை வணங்கி அவருக்கப் படைத்த உணவை சாப்பிட்டால் அன்னதோஷம் நீங்கும். கோவிலில் கொடுக்கப்படும் அன்னத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து அதனுடன் தயிர் அல்லது வெண்ணை கலந்து பிரசாதமாக நாம் சாப்பிடலாம்.

சிவன் கோவிலுக்கு அரிசி வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் நம் சந்ததிகளுக்கும் சேர்த்து பல புண்ணியங்கள் வந்து சேர்கின்றன. அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் அன்னத்திற்குப் பஞ்சமே வராது என்பது ஐதீகம்.

குழந்தை இல்லாத தம்பதியர் அரிசி மற்றும் பழங்கள் முக்கியமாக செவ்வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க வேண்டும். சிவன் கோவிலுக்குச் சென்று அங்கு கொடுக்கப்படும் அன்னத்தை வாங்கி சாப்பிடலாம். நிச்சயமாகக் குழந்தை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அக்.28 சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பௌர்ணமி ஆரம்பிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணி வரை பௌர்ணமி இருக்கிறது.

Annabishekam 4
Annabishekam 4

சந்திரகிரகணம் அக்.28 சனிக்கிழமை இரவு 11.31 முதல் ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.56 வரை நீடிக்கிறது. பௌர்ணமி பூஜை செய்பவர்கள் சனிக்கிழமை இரவு 8 மணிக்குள் பூஜையை முடித்துவிட வேண்டும். இந்த சந்திரகிரகணமானது இந்தியாவில் தெரியும் என்று ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரகிரகணம் ஆரம்பிப்பதற்கு முன் நீங்கள் வீட்டில் உள்ள பொருள்களில் தர்ப்பைப்புல்லைப் போட்டு வைக்கலாம். பூஜை அறையில் நிலைவாசல் அல்லது சுவாமி படங்கள் உள்ள மேடையிலும் தர்ப்பைப் புல்லை வைக்கலாம்.

Tharpai pul
Tharpai pul

நிலைவாசலில் தர்ப்பை புல்லைக் கட்டி வைக்கலாம். சாப்பிடக்கூடிய உணவுப்பொருள்களான அரிசி, பருப்பில் தர்ப்பைப்புல்லை போட்டு வைக்கலாம். கிரகணம் முடிந்த பிறகு அந்த தர்ப்பை புல்லை அந்தப் பொருள்களில் இருந்து எடுத்து விடுங்கள். அதற்கு தோஷமே கிடையாது.

எப்போதுமே தர்ப்பைப்புல்லை வீட்டு வாசல் நடுவில் ஒரு கொத்து எடுத்து நூலில் கட்டித் தொங்கவிடுங்கள். இப்படி கட்டி விடும்போது வீட்டிற்குள் எவ்வித தோஷங்களோ, எதிர்மறை எண்ணங்களோ உள்ளே வராது.

தெய்வசக்தியை ஈர்க்கக்கூடிய ஆற்றல் இந்த தர்ப்பை புல்லுக்கு உண்டு. சந்திரகிரகணம் ஏற்படக்கூடிய நேரத்தில் சிவபெருமானை நினைத்து தியானம் செய்யலாம். அல்லது உங்கள் இஷ்டதெய்வத்தை நினைத்து தியானம் செய்யலாம். இந்த நாளில் தியானம் செய்யும்போது நீங்கள் உச்சரிக்கக்கூடிய மந்திரங்கள் உங்களுக்கு சித்தியாகும்.

சந்திரகிரகணம் ஆரம்பிப்பதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னால் உணவு சாப்பிட வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் அன்றைய நாளில் நகம் வெட்டக்கூடாது. இரவு நேரத்தில் குளிக்கக்கூடாது. ஓம் நமசிவாய அல்லது உங்களுக்குத் தெரிந்த நாமத்தை உச்சரிக்கலாம். கிரகணம் நடைபெறும் சமயத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கத்தி போன்ற கூர்மையான பொருள்களைத் தொடவோ, கையில் வைத்திருக்கவோ கூடாது.

கிரகணம் நடைபெறும் சமயத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கிரகணக் கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருக்க குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் உடல் பலவீனமானவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

Meditation
Meditation

குறிப்பாக சண்டை சச்சரவுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் இஷ்ட தெய்வத்தை வணங்குவது நல்ல பலனைத் தரும். மந்திரம் தெரியாதவர்கள் கிரகணம் சமயத்தில் ஓம் நமசிவாய, ஸ்ரீராமஜெயம், சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்கலாம்.

மந்திரங்களை ஒருமுறை உச்சரித்தாலே பலமுறை உச்சரித்ததற்குச் சமம். கிரகணம் முடிந்தபின் வீட்டையும் வாசலையும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். குளிக்கும் தண்ணீரில் மஞ்சள், கல் உப்பு, வேப்பிலை போட்டுக் குளிக்க வேண்டும். தோஷம் விலகும். குளித்த பின் சுவாமி படங்களை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட்டால் மிகவும் நல்லது.

பொதுவாக சந்திரகிரகணம் நாளில் யாரிடமும் நாம் தானம் எதுவும் வாங்கக்கூடாது. முக்கியமாக உணவு தானம் பெறக்கூடாது. அன்றைய தினம் கோவிலுக்குச் சென்று வழிபட்டு அர்ச்சனை செய்து 2 நெய் தீபம் ஏற்றி வந்தால் உங்களுக்கு சந்திரபகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...