பெரியாரைக் கண்டாலே ஆகாத எம்.ஆர்.ராதா.. ரொம்ப புடிச்ச தலைவர் இவர்தானாம்…

நடிகவேள் எம்.ஆர். ராதா சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பிறந்து வளர்ந்து, ஏழு வயதில் ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து, பிறகு பல கம்பெனிகள் மாறி, பிறகு தனக்கென தனி நாடக சபாவை ஆரம்பித்து பல ஹிட் நாடகங்களைக் கொடுத்தவர். இவரது இரத்தக் கண்ணீர் நாடகம் மட்டும் கிட்டத்தட்ட 3000 முறைக்கு மேல் மேடை ஏற்றப்பட்டிருக்கிறது. மேலும் திரைப்படமாகவும் உருவாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு இவர் பெற்ற சம்பளம் அந்தக் காலத்திலேயே ஒரு லட்சம் ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனந்த விகடனின் பழைய பேட்டி ஒன்றில் எம்.ஆர்.ராதா அரசியல் பற்றிக் கூறும் போது, “”நான் எந்த அரசியல் கட்சியிலும் இருந்தது கிடையாது. திராவிடக்கட்சியிலும் நான் மெம்பர் இல்லே. ஆனா ஐயாகிட்டே ஒரு மரியாதை. அவர் பேச்சைக் கேட்டு நான் ரொம்பத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்திலே நான் பகவத்சிங் ஆளு. அந்தத் தியாகியின் வீரம் என் ரத்தத்திலேயும் ஒடிச்சு. அப்போ பெரியாரைக் கண்டாலே எனக்கு ஆகாது.

ஒரு சமயம் நான் கொட்டகை வாடகை கொடுக்கல்லேன்னு என் சாமானையெல்லாம் ஜப்தி பண்ணிட்டாரே! அப்புறம் அவரே டிக்கெட் வாங்கிக்கிட்டு வந்து என் நாடகத்தைப் பார்த்தாரு. ‘இவனும் நம்ம வேலையைத்தான் செய்யறான்னு ஒப்பனை மேடை மேலே ஏறி ஒப்புக்கிட்டாரு…” என்று கூறினார்.

எம்.ஜி.ஆர் படத்துக்கு மியூசிக் போட்ட இளையராஜா.. வெளிவராமலே பாதியில் முடங்கிய சோகம்

மேலும் இவரின் அடையாளமாகக் கருதப்படும் இவரது குரல் மாடுலேஷன் நடிப்பு பற்றி கேட்கும் போது, “அதென்னமோ எனக்குத் தெரியாது. எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க. நடிக்கறபோது இயற்கையாகவே அப்படி வந்துடுது. நான் வேணும்னு குரலே மாத்தறது இல்ல.” என்று அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார் எம்.ஆர்.ராதா.

மேலும் படிப்பு பற்றிக் கேட்ட கேள்வியில் “பத்திரிகையா? நான் பத்திரிகையே படிப்பதில்லை. எனக்குப் படிக்கவே தெரியாது. எழுத்துக்களை ‘ ‘கம்ப்போஸ்’ செய்வேன். அதாவது கொட்டை எழுத்துக்களை எழுத்துக் கூட்டிப் படிப்பேன். நான் படிச்சதெல்லாம் உலக அனுபவம் என்கிற படிப்புதான். வேறே பள்ளிக்கூடத்திற்கும் நான் போனதில்லே.” என அந்தப் பேட்டியில் பளிச்சென பதில் கொடுத்திருக்கிறார் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews