எங்களுக்கு நடிப்பு மட்டும் தொழில் இல்ல… வயக்காட்டிலும் இறங்குவோம்.. விவசாயத்தில் கெத்து காட்டும் நடிகர்கள்

என்னதான் சினிமாவில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும் மன நிறைவான ஒரு தொழில் செய்தால் தான் தூக்கம் என்பது வரும். அந்தவகையில் சினிமா மட்டுமின்றி உலகிற்கே சோறு போடும் விவசாயத்திலும் தங்களது பங்களிப்பைச் செய்துவருகிறார்கள் சில முன்னணி நடிகர்கள்.

நவாஸுதீன் சித்திக்:

இவர் ஒரு பிரபலமான ஹிந்தி பட நடிகர்.தமிழில் சூப்பர்ஸ்டாரின் “பேட்ட” படத்தில் வில்லனாக நடித்திருப்பார். உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தனது விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தனது கிராமத்துக்கு சென்று அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் பொழுதை களிப்பதாக கூறியிருக்கின்றார்.

அவரின் முன்னோர்களுக்கு விவசாயம் தான் பரம்பரை தொழில் என்றும் கடந்த 20 ஆண்டுகளாக அவ்வப்போது இதனை செய்து வருவது தனது மனதிற்கு மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் தருவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பவன் கல்யாண்

“நான் ஒரு நடிகராக இல்லாதிருந்தால் கண்டிப்பாக விவசாயியாக இருந்திருப்பேன் ” என்று கூறியிருக்கிறார் தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண்.விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மரங்களை பற்றி அதிகம் பேசுபவர்.

ஹைதராபாத்தின் புறநகரில் உள்ள தனது சொந்த பண்ணை வீட்டில் பல நாட்கள் விவசாயம் செய்து தனது ஓய்வு நேரத்தை கழித்திருக்கிறார்.

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் சில வருடங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டரேடிபள்ளியில் ஒரு கிராமத்தை தத்தெடுத்தார். இதற்கு முன்னரே அவர் அங்கு விவசாயத்தில் பல நவீன சாகுபடி முறைகளை செயல்படுத்தி இருக்கிறார். தனது சொந்த பண்ணையில் விஞ்ஞான விவசாய நுட்பங்களை பரிசோதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மம்முட்டி

மலையாள சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான மம்முட்டி ஒரு விவசாய பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கேரளாவில் மிகப்பெரிய நெல் வயல்களை கொண்டிருக்கும் அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது பண்ணையில் வேலை செய்வதாக தெரிவித்திருக்கின்றார். ஆர்கானிக் பார்மிங்கின் (கரிம விவசாயம் ) மீது இளைஞர்கள் தீவிரமாக ஆர்வம் கொண்டு ஈடுபட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

கிஷோர்

இந்த உலகத்தில் அனைவரும் பணம் சம்பாதிப்பதன் முதல் நோக்கம் உணவு தான்.மனிதர்களாகிய நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் மற்றும் சக்திவாய்ந்த வேலை விவசாயம் மட்டுமே என்று உறுதியாக நம்புபவர் தமிழ் படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக இருக்கும் கிஷோர். அவர் தனது நிலத்தில் ஆர்கானிக் பார்மிங் செய்து வருகிறார்.இவரும் விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் தான்.

இவர்களைத் தவிர கருணாஸ், நடிகை சீதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகளும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.