குளுகுளு ஜிலுஜிலு ரஸாலா எனப்படும் லஸ்ஸி


தயிரில் சில பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பானத்துக்கு ‘லஸ்ஸி’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் இதற்கு  ‘ரஸாலா’ என்று பெயர். மகாபாரத காலத்திலேயே இது பயன்படுத்தப்பட்டதாக பழமையான ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. கண்ணன், பீமனுக்கு இந்த பானத்தை தயாரித்துக் கொடுத்திருக்கிறாராம். இதற்கு `பீம சேன சீகாரணி’ என்று பெயராம். சத்ரபதி சிவாஜி காலத்தில் வாழ்ந்த ஆயுர்வேத அறிஞர் ரகு நாத சூரி, தான் எழுதிய ‘போஜன  குதூகலம்’ என்ற ஆயுர்வேத (உணவு தயாரிப்பு தொழில்நுட்ப) நூலில் இதன் மகத்துவத்தையும் பல வகையான லஸ்ஸி தயாரிப்பு முறைகளைப் பற்றியும் விரிவாகக்  குறிப்பிட்டுள்ளார்.


லஸ்ஸியில்  கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் நிறைவாக உள்ளன. லஸ்ஸியில் உள்ள ஊட்டச்சத்துகள் செரிமானத்துக்கு தேவையான என்சைம்களை அதிகரித்து, செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை  பலப்படுத்தும்.  மலச்சிக்கல், வயிற்றுப் புண், வயிறு உப்புசம் உள்ளிட்ட வயிற்று உபாதைகளைச் சரியாக்கும். லஸ்ஸியில்  கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது. வைட்டமின் பி 12 ரத்தத்தில் உள்ள குளூக்கோஸை ஆற்றலாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் வைட்டமின் பி 12 இருப்பதால், ஒரு டம்ளர் லஸ்ஸி குடித்தால் உடனடி ஆற்றல் கிடைக்கும். தொடர்ச்சியாக, லஸ்ஸி சாப்பிட்டு வந்தால், வைட்டமின் பி 12 (Vitamin B12 Deficiency) குறைபாட்டு நோய் நீங்கும்.


இத்தனை மகத்துவம்   வாய்ந்த லஸ்ஸியை கடையில் வாங்கி சாப்பிடுவது அத்தனை ஆரோக்கியத்துக்கு எந்தளவுக்கு சரியென்று தெரியாது. அதனால் வீட்டினிலேயே செய்வது எப்படின்னு பார்க்கலாமா?!

தேவையான பொருட்கள் 

தயிர் – 1 கப் 
சர்க்கரை – 1 தேக்கரண்டி  
தேன் – சர்க்கரையில் நான்கில் ஒரு பங்கு 
நெய், சுக்கு, மிளகு, லவங்கப் பொடி – சிறிதளவு.

செய்முறை:

தயிருடன் சர்க்கரை, தேன் சேர்த்து
மிக்சியில் நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அல்லது தயிர் கடையும் மதத்திலும் கடையலாம். அத்துடன் சிறிது நெய் சேர்த்து, ஒரு சிட்டிகை சுக்கு, மிளகு, லவங்கப் பொடி சேர்த்தால் லஸ்ஸி எனப்படும்  ரஸாலா ரெடி. இதை மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்துவது
கூடுதல் சுவையினை தரும்  .

Published by
Staff

Recent Posts