இளையராஜா டியூன் சொன்ன நிமிடத்தில் மளமளவென பாடல் எழுதிய கவியரசர்.. கடைசி பாடலாக அமைந்த சோகம்!

கவியரசர் கண்ணதாசனும், இசைஞானி இளையராஜாவும் இணைந்து சுமார் ஐந்து ஆண்டுகளே பணியாற்றி இருக்கின்றனர். அதற்குள் கண்ணதாசனை காலன் கொண்டு செல்ல தமிழ் சினிமாவிற்கு இன்னும் பல பொக்கிஷமான பாடல்கள் கிடைக்காமல் போய்விட்டது.

எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி- கண்ணதாசன் கூட்டணி என்றாலே அந்தப் படம்ஹிட் என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு ஆளுமையையே ஏற்படுத்தி தன்னுடைய வரிகளுக்கு இசை, இசைக்கு தன்னுடைய பாடல் வரி என்று மூன்று மேதைகளும் இயல் தமிழோடும், இசைத் தமிழோடும் கொஞ்சி விளையாடி பல எவர்கிரீன் பாடல்களைக் கொடுத்தனர்.

பின் மூவரும் வெவ்வேறு தருணங்களில் பிரிய நேரிட்டது. வாலியும் பாடல் எழுத வந்துவிட்டார். இசைஞானி இளையராஜாவும் வந்துவிட்டார். பழைய மூவர் கூட்டணி செய்த வித்தைகளை கொஞ்சம் கூட குறையாமல் இவர்களும் செய்தனர். பாடல்களில் ரசிகர்களை மகிழ்வித்தனர். இருப்பினும் கண்ணதாசனும் தனது பாடல் புலமையை தன்னுடைய கடைசி பாட்டு வரை வெளிப்படுத்தி கவியரசர் என்பதை சாதித்த தருணம் தான் மூன்றாம் பிறை பாடல்.

இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா இயக்கத்தில் கடந்த 1982-ல் வெளியான படம் தான் மூன்றாம் பிறை. கமல், ஸ்ரீதேவி மற்றொருமொரு நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்த படம். சிறந்த நடிகருக்காக கமலுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளருக்காக பாலுமகேந்திராவுக்கும் தேசிய விருதினைப் பெற்றுக் கொடுத்த காவியம். மூன்றாம் பிறையின் கிளைமேக்ஸ் பார்த்து கண் கலங்காதவர்கள் யாருமே இல்லை  எனலாம்.

சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?

இந்தப் படத்தில் இடம்பெற்ற கண்ணே கலைமானே பாடல் கவியரசர் கண்ணதாசனுக்கு கடைசிப் பாடலாக இருக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இந்தப் பாடலுக்கான காட்சியை இயக்குநர் பாலுமகேந்திரா கண்ணதாசனிடம் விவரித்துக் கூற பின் இளையராஜா கண்ணதாசனுக்கு டியூனை வாசித்துக் காட்டியிருக்கிறார். மறுபடியும் ஒருமுறை கூறுங்கள் என்று கண்ணதாசன் கேட்க, இளையராஜா சொல்லச் சொல்ல கண்ணே கலைமானே, கண்ணிமையில் எனக் கண்டேன் உனை நானே..  என்று டியூனைக் கேட்ட மாத்திரத்தில் தமிழருவியாய் பாடலைப் பொழிந்திருக்கிறார் கண்ணதாசன்.

கண்ணதாசனின் இந்த வேகத்தைக் கண்ட இளையராஜா உலகில் இவ்வளவு வேகமாக உங்களை விட பாட்டெழுதுபவர் யாருமே இல்லை எனப் புகழ்ந்திருக்கிறார். இந்தப் பாடலே கவிஞர் கண்ணதாசனுக்கு இறுதியான திரைப்படப் பாடலாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews