நீ அதிர்ஷ்டக்காரன்டா.. இளையராஜாவைப் பாராட்டிய கண்ணதாசன் எதற்கு தெரியுமா?

கவிஞர் கண்ணதாசனின் பெருமைகளைப் பற்றியும், அவர் இயற்றிய பாடல்களைப் பற்றியும் சொல்லித் தெரிய வேண்டியதே இல்லை. முத்தையா என்ற தனது இயற்பெயரினை ஒரு பத்திரிக்கையில் ஆசிரியர் பணிக்காகச் சேர்ந்த போது அங்கு கண்ணதாசன் என மாற்றிக் கொண்டார்.

தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞராகவும் திகழ்ந்தவர். இவர் எழுதிய பாடல்களில் பெரும்பாலும் பாட்டுக்கு மெட்டு என்ற அடிப்படையிலேயேதான் இருக்கும். இவருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்குமான உறவு அலாதியானது. இவர்களுக்குள் இயலா, இசையா என்ற போட்டி அடிக்கடி வரும்.

இவ்வாறு உருவான ஆரோக்கிய போட்டிகளில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காதில் தேன் சிந்தும் பல இனிமையான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. இப்படி 5000க்கும் மேற்பட்ட பாடல்களையும், 4,000க்கும் மேற்பட்ட கவிதைகளியும், உரைநடை நூல்களையும் இயற்றிய கண்ணதாசன் இறுதியாக பாட்டெழுதியது மூன்றாம் பிறை படத்திற்காகத் தான்.

ஏவிஎம் லோகோ மியூசிக் இவரோடதா.. நடிகர் திலகம், உலக நாயகன் அறிமுகமான படங்களுக்கு ஹிட் பாடல் போட்ட இசையமைப்பாளர்

கண்ணதாசனுக்கு அப்போது உடல் நலம் குன்றியிருந்த நேரம். மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். எனினும் தான் ஒத்துக் கொண்ட படங்களுக்குரிய பாடல்களை எழுதி முடிக்கவில்லையே என்ற வருத்தம். இதனால் அமெரிக்க செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த நாளில் காலை அரைமணி நேரத்தில் விசுவின் படம் ஒன்றில் பாடல் எழுதியிருக்கிறார். அப்போது அவரிடம் இதுதான் எனது கடைசிப் பாட்டு என்று கூறியிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து பாலுமகேந்திராவும், இளையராஜாவும் மூன்றாம் பிறை படத்திற்காக பாடலைக் கேட்க அடுத்த அரைமணி நேரத்தில் கண்ணே கலைமானே பாடலை முடித்து விட்டுத் திரும்பிய கண்ணதாசன் இளையராஜாவைப் பார்த்து, “நீ அதிர்ஷ்டக்காரன்டா.. இப்போது தான் விசுவிடம் எனது கடைசிப் பாடல் என்று கூறிவிட்டு வந்தேன். ஆனால் உனக்கு எழுதியதே என் கடைசிப் பாடலானது” என்று கூறி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றவர் அதன்பின் உயிரோடு திரும்பவில்லை. பின் சிகாகோ நகரிலிருந்து அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டு லட்சணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலியுடன் அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

Published by
John

Recent Posts