தமிழில் நடிச்சது 6 படங்கள்.. அதுல 2 ரஜினி கூட.. தென் இந்தியாவையே கலக்கிய கன்னட சூப்பர்ஸ்டார்!

தமிழ் திரையுலகில் பிறமொழி நடிகர்கள் அதிகம் நடித்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே பல தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் நடித்துள்ள நிலையில், இன்று வரையிலும் அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி செராஃப் உள்ளிட்ட நடிகர்களும், விஜய்யின் லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத்தும் நடித்திருந்தனர்.

அந்த வகையில் ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த போது கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்து தமிழில் நடித்தவர் தான் நடிகர் விஷ்ணுவர்தன். இவர் மொத்தம் ஆறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஷ்ணுவர்தன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மைசூரில் பிறந்தவர். இவர் சிறுவயதிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு ஆரம்பத்தில் சினிமா மீது ஆர்வம் இல்லாமல் இருந்த நிலையில் திடீரென ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்ததையடுத்து அவர் அதனை பயன்படுத்திக் கொண்டார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு ’வம்சவிருத்தா’ என்ற கன்னட படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த நிலையில் அவரது நடிப்பு அனைவரும் கவர்ந்திருந்தது. இதன் காரணமாக, பல படங்களிலும் அவர் நடித்து வந்தார். கன்னடத்தில் 1972 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தான் அவருக்கு தமிழில் ’அலைகள்’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஷ்ணுவர்தன் மற்றும் சந்திரலேகா நடித்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் நடிகை லட்சுமி இயக்கத்தில் உருவான  ’மழலைப்பட்டாளம்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படமும் சூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து விஜயகாந்த் நடிப்பில் உருவான ’ஈட்டி’ என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பார் விஷ்ணுவர்தன். அவர் விஜயகாந்துடன் மோதும் சண்டை காட்சிகள் அந்த காலத்தில் மிக பிரபலம்.

இந்த நிலையில் தான் ரஜினியின் நூறாவது படமான ஸ்ரீராகவேந்திரா என்ற படத்தில் விஷ்ணுவர்தனுக்கு நடிக்க அழைப்பு வந்தது. அந்த அழைப்பை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். அவர் இந்த படத்தில் ஸ்ரீ யோகேந்திரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். தொடர்ந்து ரஜினியுடன் மீண்டும் ’விடுதலை’ என்ற படத்தில் நடித்த விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன் நடித்த ’பருவராகம்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

தமிழில் ஆறு படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அதில் இரண்டு படங்கள் ரஜினிகாந்துடன் நடித்திருந்தது ஆகும். மேலும் மலையாளம், தெலுங்கு,  ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார். நடிகர் விஷ்ணுவர்தன் கன்னட நடிகை பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி உடன் பல படங்கள் நடித்துள்ளவர்.

நடிகர் விஷ்ணுவர்தன் கடந்த 2009 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அப்போது அவருக்கு வயது 59 தான். அவரது மறைவிற்கு கன்னட திரையுலகம் மட்டுமில்லாமல், தென் இந்திய திரை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...