கரைபடியாத காமராசருக்கே கிசு கிசுவா..? ஒரே பதிலால் அதிகாரிகளை வாயடைக்க வைத்த கர்மவீரர்!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், கிங் மேக்கருமாக விளங்கிய கர்மவீரர் காமராசரைப் பற்றி எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எழுதிக் கொண்டே போகலாம். படிக்காத மேதையாக விளங்கியவர் அவர் ஆட்சிக் காலத்தில் அதிக பள்ளிகளைத் திறந்து அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தார். இன்று 70 வயதிற்கு மேல் ஓய்வூதியம் பெற்று வாழும் முன்னாள் அரசுப் பணியாளர்கள் பெரும்பாலும் காமராசரின் ஆட்சியில் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தில் உணவிற்காக பள்ளி சென்று பின் தகுதியை வளர்த்து அரசுப் பணியில் சேர்ந்தவர்களே..

மேலும் தமிழ்நாட்டில் இவர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைகளே இன்று தமிழ்நாட்டின் பெரும்பான்மையான தண்ணீர் பஞ்சத்தைப் போக்கி வருகிறது. இப்படி தனக்கென்று கடைசி வரை எதையும் சேர்த்து வைக்காமல் நாட்டுக்காக உழைத்த கர்மவீரராக, கரை படியாத அரசியலுக்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தார் காமராசர். இவரின் ஆட்சிக்குப்பின் தமிழ்நாட்டில் வீழ்ந்த காங்கிரஸ் இன்றுவரை எழவே இல்லை.

தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் நாட்டு மக்களின் நலனுக்காகவே செலவிட்ட காமராசரைப் பற்றி ஒருமுறை கிசு கிசு வந்தது. ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு காமராசர் எப்படி உடனே அனுமதி கொடுத்தார் என்பது தான். இதை எப்படியோ காமராசர் அறிந்து கொண்டார். பின் அதிகாரிகளை அழைத்து விபரம் கேட்டிருக்கிறார்.

பாவ மன்னிப்பு படம் பார்த்து பாச மலர்களாக மாறிய சிவாஜி- லதா மங்கேஷ்கர்.. இப்படி ஒரு பாசமா..!

திண்டுக்கல் நகர எல்லையைக் கடந்து அமைக்கப்படவுள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்காக அனுமதி கேட்டு வந்த கோப்பினை அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டிருந்தனர். அதற்குக் காரணம் அந்த தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் கிட்டத்தட்ட 60 கிராமங்களுக்கு மேல் ரோடு போட வேண்டும். மேலும் ஆங்காங்கே டிரான்ஸ்பார்ம்கள் வைத்து மின்சாரம் கடத்திச் செல்ல வேண்டும்.

தற்போது  இருக்கும் நிதிச் சூழலில் இந்த திட்டத்திற்கான அனுமதி கொடுத்தால் அது நிதி நிர்வாகத்தைப் பாதிக்கும் என்பதால் அதிகாரிகள் அதனை கிடப்பில் போட்டிருந்தனர். இதனை அறிந்த காமராசர் அதிகாரிகளை அழைத்து உடனே அந்த நிறுவனம் தொழிற்சாலை அமைக்க அனுமதி கொடுங்கள் என்றிருக்கிறார்.

காமராசர் ஏன் இப்படிச் சொல்கிறார் என்பதை அறியாத அதிகாரிகளுக்கு மீண்டும் அவரே விளக்கம் சொல்லியிருக்கிறார். அந்த நிறுவனத்திற்கு நான் ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறேன்.

புதிதாக தொடங்கவிருக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரத்தை திண்டுக்கல்லில் இருந்து கொண்டு வர, நிர்வாகத்தினர், தங்களது சொந்த  செலவிலேயே மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த நிபந்தனைக்கு சம்மதித்தால், தொழிற்சாலை தொடங்க உடனடியாக அனுமதி கொடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

அதை அந்த நிறுவனமும் ஏற்றுக் கொண்டது. பின் அதிகாரிகளிடம் இப்போது சொல்லுங்கள். அந்த தொழிற்சாலையை அமைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு எவ்வளவு பணம் மிச்சமாகிறது.  அதிகாரிகள் ஒருகனம் காமராசரையே வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைப் பற்றிய கிசுகிசுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews