திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ இவர்தானா? நடிப்பில் சிவாஜியுடன் போட்டிபோட்ட நாயகன்

வெண்ணிற ஆடை திரைப்படம் மூவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தைக் கொடுத்த ஒரு படம். மூர்த்தி, நிர்மலா, ஜெயலலிதா ஆகிய மூவருக்கும் முதல்படமாக அமைந்து மூவருமே திரையில் கொடிகட்டிப் பறந்தவர்கள். அந்தப் படத்தில் ஜெயலலிதாவிற்கு முதன் முதலாக ஜோடியாக நடித்தவர் ஸ்ரீ காந்த்.

அமெரிக்கத் தூதரகத்தில் பொறுப்பான அரசுப்பணியில் இருந்த இவருக்கு மேடை நாடகங்கள் மீது மோகம் ஏற்பட நாடகம், சினிமா பக்கம் தன் வாழ்க்கையைத் திருப்பினார். ஈரோடு பக்கம் சொந்த ஊரைக் கொண்ட இவர் சினிமாவிற்காக சென்னையில் செட்டில் ஆனார். இவரின் அறையில் இருந்துதான் கே.பாலச்சந்தர் ஏராளமான கதைகளை எழுதினார். மேலும் கவிஞர் வாலி, நாகேஷ் ஆகியோர் சமகாலத்து இளைஞர்களாக இருந்ததால் அனைவரும் வாடா.. போடா.. என்று அழைக்கும் அளவிற்கு நண்பர்கள்.

மேஜர் சந்திரகாந்த், எதிர் நீச்சல், பாமா விஜயம் போன்ற பல படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்த ஸ்ரீகாந்துக்கு வெண்ணிற ஆடை திரைப்படம் மேலும் புகழைச் சேர்த்தது.  ஸ்ரீகாந்த் தனது மகளை பள்ளியில் அழைத்து வரும் போது மாணவிகள் அவரை ஸ்ரீ காந்த் , ஸ்ரீ காந்த் என்று அவரை கலாட்டா செய்வார்களாம். அவ்வாறு கலாட்டா செய்த மாணவிகளில் பின்னாளில் அவருடனே ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீபிரியா.

மெட்ராஸ் பாஷையின் நாயகன் லூஸ் மோகன்… இப்படித்தான் இந்தப் பெயர் இவருக்கு வந்ததா?

ஜெயலலிதாவின் முதல் ஹீரோ மட்டுமல்லாமல், ஸ்ரீகாந்தின் வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக ‘தங்கப்பதக்கம்’ திகழ்ந்தது. அந்தப் படத்தில் கேரக்டரில் சிவாஜிக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருந்தார். இவரின் நடை, உடை, பாவனைகளும் வசன உச்சரிப்புகளும் எவர் சாயலுமில்லாமல் புதுமாதிரியாக இருந்தது என்பதும் இவரின் வெற்றிக்கு முக்கியக் காரணம். சிவாஜியின் மகனாக இதில் மிரட்டியிருப்பார். மேலும் ‘ராஜபார்ட் ரங்கதுரை’யில் சிவாஜியின் தம்பியாக அசத்தியிருப்பார்.

‘எதிர்நீச்சல்’ படத்தில் கிட்டுமாமாவாக ஸ்ரீகாந்த், பட்டுமாமியாக செளகார் ஜானகியும் காமெடியில் கலக்கி சிரிக்க வைத்திருப்பார்கள். இன்றளவு இந்த இரு பெயர்களும் பிரபலம். எழுத்தாளர் ஜெயகாந்துடன் ஆழ்ந்த நட்பு கொண்டவர். அவரின் எழுத்துக்களுக்கு ரசிகராகி இலக்கிய ரசனை உள்ளவராகவும் திகழ்ந்தார்.

சிவாஜி, முத்துராமன், ஜெய்கணேஷ், விஜயகுமார், சிவகுமார், கமலஹாசன், ரஜினிகாந்த் என பலருடனும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’ படத்திலும் நடித்தார். நன்கு ஆரோக்கியமாக இருந்த ஸ்ரீகாந்த் கடந்த 2021-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மறைந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...