ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம்… மறக்கவே முடியாது என்று குமுறும் ரசிகர்கள்!

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்தது. கடந்த மாதம் 12ஆம் தேதி நடைபெற இருந்த அவரின் இந்த இசை கச்சேரி மழையால் ரத்தானதால் நேற்று(செப்டம்பர் 10) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே ஏஆர் ரகுமானின் இசை கச்சேரி நடைபெற்றது.

இதை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் ஈசிஆர் சாலையில் வந்தனர். அதேபோல் போகும் போதும் அப்படித்தான் கிளம்பினார்கள்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே ECR, OMR சாலைகளில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இருக்காது. ஆனால் ECR சாலையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை கச்சேரி நேற்று நடைபெற்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் சென்னைவாசிகள் ECR சாலையில் தேவையற்ற வேலைகளுக்காக பயணிக்க வேண்டாம், ஒஎம்ஆர் சாலையில் செல்லுங்கள் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியது.

ஏஆர் ரகுமான் நடத்திய கச்சேரி.. காசு ஆட்டைய போடறதுகுன்னே..குமுறும் நெட்டிசன்கள்

இது ஒருபுறம் எனில், இசை நிகழ்ச்சி காரணமாக ECR சாலையில் சென்ற வாகனங்களை OMR சாலை வழியாக திருப்பிவிடப்பட்டதால் ECR சாலை, சோழிங்கநல்லூரில் பல மணி நேரமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக சென்னை நகரம் ஸ்தம்பித்து போனது.

பல வாகனங்கள் நகரக்கூட முடியாமல் இரவு முழுவதும் தத்தளித்தன. ஏற்கனவே இசை கச்சேரிக்கு போன ரசிர்கள் எதையும் பார்க்க முடியவில்லை என்று நொந்து போனவர்களுக்கு இந்த போக்குவரத்து நெரிசல் தாங்க முடியாத வலியை கொடுத்தது.

போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் எனில் ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரிக்கு ஏற்பாடுகள் செய்த நிறுவனம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளும், புகார்களும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தெரிவித்து வருகிறார்கள். சென்னையில் நடைபெற்ற இசை கச்சேரிகளிலேயே மோசமான ஏற்பாடுகளை கொண்ட நிகழ்ச்சி இதுதான் என்றே பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் ரூ. 50 ஆயிரம் வரை இந்த இசை நிகழ்ச்சிக்கு அதிகாரப்பூர்வமாக டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இசை கச்சேரி நிகழ்ச்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் மதியம் 2 மணியளவிலேயே தங்கள் இருக்கைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். இதனால் வயதான பெண்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆயிரக்கணக்கில் கதவு முன்பு காத்துகிடந்துள்ளனர். இது பலரையும் சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது. சிலர் மயங்கி விழும் நிலைக்கு போய்விட்டதாக கூறியுள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் சரியில்லை என்றும், பார்க்கிங் உள்பட எந்த அடிப்படை வசதிகளையும் சரியாக செய்யவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஒரு பெண், சிலர் கூட்டத்தை பயன்படுத்தி அத்துமீற முயன்றதாக வேதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,”கூட்டத்தை சாதகமாக வைத்து ஆண்கள் சிலர் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டார்கள். நாங்கள் சுவாசிக்கக் கூட சிரமப்பட்டோம்.” என குறிப்பிட்டு, ‘என்னுள் இருந்த ரசிகை இன்று இறந்துவிட்டார், அதற்கு ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...