தூக்கத்தின் போது கடுமையாக குறட்டை விடுகிறீர்களா? அலட்சியமாய் இருக்காதீர்கள்…!

தூங்கும் பொழுது ஒரு சிலருக்கு குறட்டை விடுவது என்பது இயல்பு. எப்பொழுதாவது ஒரு நாள் குறட்டை சத்தம் வருவது சாதாரணம் உடல் அசதியால் கூட ஏற்படலாம். ஆனால் ஒரு சிலருக்கு தினமும் அதிக சத்தத்துடன் குறட்டை உண்டாகும். தினமும் தூக்கத்தில் குறட்டை விடுபவரை விட அருகில் இருப்பவருக்கே தூக்கம் பிரச்சனையாகி விடுகிறது குறட்டை விடுபவர் நன்கு ஆழ்ந்த உறங்குகிறார் என்று நினைக்க வேண்டாம். அவர் உடலில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று கண்டறிய வேண்டும்.

குறட்டை எப்படி ஏற்படுகிறது?

சுவாசிக்கும் காற்றானது மூக்கிலிருந்து மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை சென்றடையும். இந்த மூச்சுக்குழலில் ஏதேனும் தடை ஏற்பட்டால் குறட்டை உண்டாகும். உறங்கும் பொழுது தொண்டையில் உள்ள தசைகள் தளர்வாகி ஓய்வெடுப்பதனால் மூச்சுக் குழல் சற்று சுருங்கும் இதன் வழியாக காற்று செல்லும் பொழுது சத்தம் ஏற்படும்.

மல்லாந்து படுக்கும் பொழுது உறக்கத்தில் தளர்வு நிலையில் நாக்கு உள்வாங்கி தொண்டைக்குள் சற்று இறங்குவதனால் குறட்டை ஒலி ஏற்படும்.

குறட்டை ஏற்பட காரணம்:

குறட்டை ஏற்படுவதற்கு பலவகை காரணங்கள் இருக்கலாம்.

1. அதிகமான உடல் எடை இருந்தால் குறட்டை உண்டாகலாம். சிலருக்கு கழுத்துப் பகுதியை சுற்றி கொழுப்பு இருக்கும் பொழுது இந்த குறட்டை அதிகரிக்கிறது.

2. மது, புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் இருப்போருக்கு குறட்டை ஏற்படலாம்.

3. சளி தொல்லை, சைனஸ், மூக்கடைப்பு, டான்சில், தைராய்டு போன்ற தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளோருக்கும் குறட்டை அதிகம் ஏற்படும்.

4. உறங்கும் பொழுது மல்லாந்து படுத்து உறங்கும் பொழுது குறட்டை ஏற்பட வாய்ப்பு உண்டு.

5. உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாமல் இருந்தாலும் குறட்டை அதிகரிக்கும்.

குறட்டையை எப்படி குறைக்கலாம்:

1. உறங்கும் நிலையை மாற்ற வேண்டும் மல்லாந்து படுக்காமல் ஒருபுறமாய் ஒரு கணித்து படுத்தால் குறட்டை ஒலி அளவை குறைக்கலாம்.

2. உடலுக்கு போதுமான அளவு நீரினை பருகி உடலை நீரேற்றத்துடன் வைத்திருந்தால் குறட்டை ஒலியை குறைக்கலாம்.

3. புகைப்பிடிப்பதால் சுவாசப் பாதையில் வீக்கம் ஏற்படும் எனவே புகை பிடிப்பதை நிறுத்தினால் குறட்டையை கணிசமாக குறைக்கலாம். ‌‌

4. ஆல்கஹால் சுவாச பாதையில் தளர்வினை ஏற்படுத்தும் எனவே ஆல்கஹாலை உறங்கும் முன் எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது குறட்டையை குறைக்கும்.

5. உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் கூடுதல் BMIயில் இருக்கும் பொழுது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தினால் குறட்டையை குறைக்கலாம்.

6. உறங்கச் செல்வதற்கு முன் சூடாக தண்ணீர் பருகலாம்.

குறட்டை விடுவது ஆபத்தா?

குறட்டை விடுவது சாதாரண பிரச்சனையாக நினைக்க வேண்டாம். அது இதயம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறியாக கூட இருக்கலாம். மூச்சுத் திணறல் பிரச்சனைக்கு வழி வகுக்கலாம். எனவே அளவுக்கு அதிகமான சத்தத்துடன் ஒலி மாறுபாட்டுடன் குறட்டை இருப்பின் மருத்துவரை அணுகி சரி செய்தல் நல்லது.

Published by
Sowmiya

Recent Posts