ஓவன் இல்லாமல் உங்களுக்கு பிடித்தவர்களுக்காக வீட்டிலேயே சாக்லேட் கேக் செய்வது எப்படி?

சாக்லேட் கேக் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பிறந்தநாள் கொண்டாட்டம், புத்தாண்டு, திருமண விழாக்கள், போன்ற எல்லா விழாக்களுமே கேக் இல்லாமல் நிறைவு பெறுவது இல்லை. விதவிதமான கேக்குகள் பலவிதமான சுவைகளில் வாங்கி சிறப்பான நாட்களை மேலும் சிறப்பானதாக மாற்றுகிறோம். இன்று கல்லூரி பெண்கள், இல்லத்தரசிகள் பலர் வீட்டிலேயே கேக் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். பேக்கரிகளில் தயாரிக்கப்படும் கேக்குகளைப் போலவே வீடுகளில் ஆர்டர் எடுத்து பிரத்தியேகமாக கேக் தயாரித்து வழங்குவதில் பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.

chocolate cake 4

இன்னும் பலருக்கு கேக் செய்ய முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றினாலும் அவர்களிடம் உள்ள மிகப்பெரிய கவலை தங்களின் வீடுகளில் ஓவன் இல்லாமல் இருப்பது. ஆனால் கவலை வேண்டாம் கேக்கை ஓவன் இல்லாமலும் எளிதாக தயாரிக்கலாம்.

ஓவனே இல்லாமல் உங்களின் பிடித்தவர்களுக்கு எளிமையான ஒரு சாக்லேட் கேக் நீங்களே வீட்டில் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.

சாக்லேட் கேக் செய்ய தேவையான பொருட்கள்:

chocolate cake

  • முட்டை – இரண்டு
  • பேக்கிங் பவுடர் – அரை ஸ்பூன்
  • வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
  • பால் – கால் கப்
  • சர்க்கரை தூள் – ஒரு கப்
  • மைதா மாவு – ஒரு கப்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • கோகோ பவுடர் – இரண்டு ஸ்பூன்
  • வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
  • சூரியகாந்தி எண்ணெய் – கால் கப்
சாக்லேட் கேக் தயாரிக்கும் முறை:

குக்கரின் அடிப்பகுதியில்  ஒன்றரை கப் அளவிற்கு மணல் அல்லது கல் உப்பு போட்டு நிரப்பிக் கொள்ளவும்.

இப்பொழுது இந்த குக்கரை கேக் தயாரிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே அடுப்பில் வைத்து விட வேண்டும். குறைந்த தீயில் வைக்க வேண்டும். குக்கரின் மூடியில் கேஸ்கட் மற்றும் விசில் போட வேண்டாம்.

இப்பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

chocolate cake 3

இதனுடன் மைதா மாவு, கோகோ பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

சூரியகாந்தி எண்ணெய், மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இப்பொழுது பால் சேர்த்து கலந்து மாவு மென்மையாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கட்டிகள் ஏதும் இருக்கக் கூடாது.

இப்பொழுது கேக் தயாரிக்க வேண்டிய ட்ரெயில் வெண்ணையை முழுவதுமாக தடவிக் கொள்ளவும்.

இந்த ட்ரேயில் தயாரித்து வைத்த மாவினை ஊற்றி குமிழ்கள் ஏதும் இல்லாதபடி தட்டிக் கொள்ளவும்.

இப்பொழுது இந்த ட்ரையை கவனமாக ஏற்கனவே சூடு செய்த குக்கரினுள் வைக்க வேண்டும்.  

கேஸ்கட் மற்றும் விசில் இல்லாதவாறு குக்கரின் மூடியை மூடி மிதமான தீயில் 45 நிமிடங்கள் வைக்க வேண்டும்.

45 நிமிடங்களுக்குப் பிறகு குக்கரின் மூடியை திறந்து பார்த்தால் மாவு நன்கு வெந்து கேக் தயாராகி இருக்கும்.

chocolate cake1

ஏதேனும் குச்சி அல்லது கத்தியை கொண்டு இந்த கேக்கினுள் வைத்துப் பார்த்தால் கேக் வெந்து உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம்.

அந்த ட்ரையை கவனமாக எடுத்து சூடு முழுமையாக ஆறி குளிர்ந்ததும் ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

இப்பொழுது இந்த கேக்கினை உங்களுக்கு விருப்பப்பட்ட படி அலங்கரித்துக் கொள்ளலாம் அல்லது அப்படியேவும் பரிமாறலாம்.

அவ்வளவுதான் சுவையான சாக்லேட் கேக் நீங்களே வீட்டில் தயாரித்து விடலாம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews