உங்கள் உடல் தோரணையை சரி செய்ய விரும்புகிறீர்களா? அப்போ இது உங்களுக்காக…!

நல்ல உடல் தோரணை என்பது நாம் நிற்கும் பொழுது, நடக்கும் பொழுது, உட்காரும்பொழுது நம் உடலை எப்படி நேராக வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தது. சிலர் அவர்களை அறியாமலேயே நடக்கும் பொழுது முதுகுப் பகுதியை வளைத்தோ, அல்லது தலைப்பகுதியை சாய்த்தோ இல்லை தோள்பட்டையை ஒருபுறமாய் சாய்த்தோ நடப்பதையோ உட்காருவதையோ பார்த்திருக்கலாம். ஏன் நீங்களே சில நேரங்களில் இவ்வாறு செய்யலாம். முதுமை பருவம் அடையும் பொழுது நம் உடல் தோரணையில் இவ்வாறு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆனால் இப்பொழுது இளமைப் பருவத்திலேயே ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது கணினி பார்ப்பது அலைபேசி பயன்பாடு போன்றவற்றின் காரணமாக வளைந்த தோற்றத்தை பெறுகிறார்கள். இதை ஆரம்பத்திலேயே சரி செய்து விடுதல் நல்லது. இல்லையேல் தசை எலும்பு சம்பந்தப்பட்ட பலவித பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

நல்ல உடல் தோரணையுடன் இருக்கும் பொழுது நம்பிக்கை அதிகரிக்கும் கம்பீரமாய் இருப்பது போல் தோன்றும். ஒரு கூட்டத்தில் நினைத்த கருத்தினை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்திடும் ஆற்றல் உண்டாகும். கூன் விழுந்தது போன்ற வளைந்த முதுகுடன் இருப்பின் தன்னம்பிக்கை குறைந்தவராக தோற்றம் அளிப்பர்.

மேலும் உடலானது நெகிழ்வுத் தன்மையை இழந்து கழுத்துப் பகுதிகளில் முதுகுப் பகுதிகளில் வலிகளை ஏற்படுத்த தொடங்கி விடும்.

உடல் தோரணை சரி செய்யும் வழிகள்:

1. ஒரு கண்ணாடியின் முன் நின்று நேராக நிற்கிறீர்களா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். தலை நிமிர்ந்து தோள்பட்டைகள் இரண்டும் பின்னோக்கியபடி முதுகுப் பகுதி வளையாமல் நிற்கிறோமா என்று பார்த்து அதன்படி தோரணை மாறாமல் நடக்கத் துவங்குங்கள்.

2. வளைந்த முதுகினை சரி செய்வதற்காக உள்ள உடற்பயிற்சிகள் அல்லது யோகாக்களை முயற்சி செய்து பாருங்கள்.

அட… தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் நமக்கு இத்தனை நன்மைகளா?

3. தலையில் கனமான புத்தகம் ஒன்றை வைத்து அது கீழே விழுந்து விடாதபடி நடக்க முயற்சி செய்து பார்க்கவும். புத்தகத்தை விழாமல் தடுக்க நம்மை அறியாமலே முதுகு, தண்டுவடம், கழுத்து, தலை என அனைத்து பகுதிகளும் நிமிர்ந்து இருக்கும். தொடர்ந்து இவ்வாறு செய்யும் பொழுது வளைந்த முதுகு நேராகும்.

4. கணினி பயன்படுத்தும் பொழுது நேராக செங்குத்தாய் நிமிர்ந்து அமர்ந்து பயன்படுத்த வேண்டும். அலைபேசி பயன்பாட்டின் பொழுது உங்கள் மொத்த உடலையும் அலைபேசியை நோக்கி வளைக்கத் தேவையில்லை. கைபேசியை உங்கள் முகத்திற்கு நேராய் வைத்து நிமிர்ந்து அமர்ந்து உபயோகித்தால் கழுத்து, முதுகு, இடுப்பில் ஏற்படும் தேவையற்ற வலிகளை தவிர்க்கலாம்.

5. உயர்ந்த ஹீல்ஸ் உடைய காலணிகளை தவிர்த்து இலகுவான நடப்பதற்கு வசதியான காலணிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. உறங்கும் பொழுது தலைக்கு வசதியான தலையணை வைத்து நேராக உறங்க வேண்டும்.

நல்ல உடல் தோரணை என்பது முக்கியமான ஆளுமை வெளிப்பாடாகும். ஒப்பனை, சிகை அலங்காரம், உடை இவற்றையெல்லாம் விட முக்கியம் ஒருவரின் நிமிர்ந்த நடை. நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் உடையவர்களே தன்னம்பிக்கை நிறைந்தவராக கருதப்படுவர்.

Published by
Sowmiya

Recent Posts