கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்… புதுக்கவிதைகள் பிறந்ததம்மா..!

நாளை மறுநாள் (6.9.2023) கோகுலாஷ்டமி. கண்ணன் பிறந்த தினம். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த பெற்றால் தான் பிள்ளையா படத்தில் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக்கவிதைகள் பிறந்ததம்மா…. மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா என்று ஒரு அருமையான பாடல் இடம்பெறும். அவ்வளவு அற்புதமான பாடல் அது. எம்ஜிஆரும், சரோஜாதேவியும் புத்தம் புது செல்ல மகனைக் கொஞ்சி மகிழ்வர். இந்தப்பாடல் கிருஷ்ண ஜெயந்திக்குப் பொருத்தமான பாடல் தான்.

Krishna Jayanthi
Krishna Jayanthi

கிருஷ்ண ஜெயந்தி என்றும் ஸ்ரீஜெயந்தி என்றும் சொல்வர். பாஞ்சராத்ர ஜெயந்தி 7.9.2023 அன்று வருகிறது. ஒரு சில நபர்கள் அஷ்டமியைக் கணக்கிட்டுக் கொண்டாடக்கூடிய நாளை கோகுலாஷ்டமி என்பர். அதே போல வைணவத்தில் இருப்பவர்களுக்கு 2 ஆகமங்கள் உண்டு. ஒன்று வைகாணஸ ஆகமம் என்றும், இரண்டு பாஞ்சராத்ர ஆகமம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

பாஞ்சராத்ர ஆகமத்தைக் கடைபிடிப்பவர்கள் ரோகிணி என்ற நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடப்படக்கூடிய நாள் ஸ்ரீஜெயந்தி. அஷ்டமியின் சொச்சமும், ரோகிணி நட்சத்திரமும் வரக்கூடிய நாள் தான் ஸ்ரீஜெயந்தி என்ற கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு தினமும் விசேஷமானது தான். அஷ்டமி கிருஷ்ணர் அவதரித்த திதி. ரோகிணி அவர் பிறந்த நட்சத்திரம்.

இந்த நாளில் எளிமையாக நாம் வழிபாடு செய்யலாம். குழந்தை வேண்டும் என்று காத்திருப்பவர்களுக்கு இது ஒரு உன்னதமான நாள். எப்போதும் வீட்டில் சந்தோஷம் இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு எல்லாவிதமான சகல சௌபாக்கியங்களும் கிடைத்து மகாலெட்சுமியின் அருளோடு பரிபூரணமாக மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதற்காகத் தான் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

Kolam
Kolam

முதல்ல நாம செய்ய வேண்டியது கோலம் போடுவது. கிருஷ்ணரோட பாதத்தை அழகாகக் கோலம் போட வேண்டியது தான். கோலம் போட்டு வீட்டுக்குள் அழைத்ததுமே அவருக்குத் தீப தூப ஆராதனைகள் காட்டி கண்ணா… கார்மேக வண்ணா என் வீட்டுக்குள் வந்து இருக்கிறாயே… என்னுடைய அழகான இந்தக் குடிசையை நீ மாளிகையாக ஏற்றுக் கொண்டு என் மனசில இருக்கக்கூடிய எல்லாவிதமான கவலைகளையும் நீக்கி, என்னை மகிழச்சியா வாழ வைக்கிறது உன்னுடைய பொறுப்பு. எங்கள் வீட்டில் இருந்து என்னுடைய வழிபாட்டு நீ ஏற்றுக் கொள்ளணும்னு கண்ணன்கிட்ட வேண்டிக் கொள்ளுங்கள்.

காலையிலேயே பாதம் போட்டு விடலாம். பாதம் போட்டதுமே கண்ணனிடம் இந்தப் பிரார்த்தனையை வேண்டிக் கொள்ளலாம். முருக்கு, அதிரசம், சீடை, கொழுக்கட்டை, மைசூர்பாகு, அல்வா, ஜாங்கிரி, ஜிலேபி, லட்டுன்னு நிறைய பட்சணங்கள் செய்யலாம். பால், தயிர், வெண்ணை, மோர், நெய் என 5 பொருள்களை வைத்து வழிபட வேண்டும். அல்லது உங்களால் என்ன முடிகிறதோ அதை வாங்கி வைக்க வேண்டும்.

கிருஷ்ணர் படம் அல்லது உருவச்சிலை வைத்து நல்ல அலங்காரம் பண்ணி பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அன்றைய தினம் குழந்தை வரம் வேண்டுபவர்கள் விரதத்தை மேற்கொள்ளலாம். மற்றவர்கள் சைவ உணவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

நமது உறுதியும், பிரார்த்தனையும் தான் கடவுளிடம் கொண்டு போய் நமது கோரிக்கையை சேர்க்கும். அதனால் மனமுருகி கண்ணனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஹரே ராம ஹரே ராம… ராம ராம ஹரே ஹரே…

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே…

என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை சொல்லி வழிபடுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews