மாசி மகத்தன்று கடவுளை வழிபடுவதால் நமக்கு இதெல்லாம் கிடைக்குமா…? அப்படின்னா… மறக்காம நாளை இதைச் செய்யுங்க…!

மாசி மகம். இது ஒரு புனிதமான நாள். நாம் நமக்குப் பிடித்த கடவுளை வழிபட உகந்த நாள். இந்த நாளில் எப்படி வழிபடுவது? என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போமா…

பௌர்ணமி 23.2.2024 மாலை 4.55 மணிக்குத் துவங்கி 24.2.2024 அன்று மாலை 6.51 மணிக்கு முடிகிறது. மகம் நட்சத்திரம் 23.2.2024 அன்று இரவு 8.40 மணிக்குத் துவங்கி 24.2.2024 இரவு 11.05 மணிக்கு முடிகிறது.

பௌர்ணமியும், மகமும் இணைந்து இருக்கும் நாள் 24.2.2024 (சனிக்கிழமை) மாசி மகம். அன்று யார் யாருக்கு எந்தெந்த தெய்வங்கள் பிடித்தமானதோ அந்தத் தெய்வத்தை வழிபாடு செய்யலாம். அம்பாள், பெருமாள் பிடிக்கும் என்றால் அவர்களையும் வழிபடலாம்.

பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக்கொள்ள உகந்த நாள். மாசிக்கயிறு பாசி படியும்னு பெரியவங்க சொல்வாங்க. அவ்வளவு நாள் நிலைத்த சுமங்கலியாக ஒரு பெண் வாழ இந்நாளில் அம்பாளிடம் பூஜை செய்து திருமாங்கல்ய கயிறை மாற்றிக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை அப்படி மாற்றிக் கொள்ளலாம்.

குடும்ப வழக்கப்படி இப்படி மாற்றினால் இந்த நாளில் அப்படி தாலிக்கயிறை மாற்றிக் கொள்ளலாம். காலை 7 மணி முதல் 8 மணிக்குள் அல்லது 11 மணி முதல் 12 மணிக்குள் மாற்றிக் கொள்ளலாம். அதே போல எல்லாரும் இந்த நாளில் மாற்ற வேண்டிய அவசியமில்லை. தேவை உள்ளவர்கள் மாற்றிக்கொள்ளலாம்.

கோவிலுக்குப் போய் வழிபாடு செய்ய வசதி உள்ளவர்கள் அங்கு சென்று வழிபடலாம். அப்படி வசதி இல்லாதவர்கள் வீட்டில் இருந்தும் வழிபாடு செய்து கொள்ளலாம். அழகான மண்கலயம், பித்தளை சொம்பு ஏதாவது ஒன்றில் நீர் அல்லது புனித தீர்த்தம், மஞ்சள் பொடி, வாசனைத் திரவியங்கள் கொஞ்சம் மலர்கள் இட்டு அதையே எல்லா புனித தீர்த்தத்திலும் நீராடக் கூடிய பலனைத் தருமாறு இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள்.

Masi magam 24
Masi magam 24

வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு நைவேத்தியமாக வைக்கலாம். இந்தத் தீர்த்தத்தைக் கொஞ்சம் பருகலாம். குளிக்கும்போது அதில் கலந்து குளிக்கலாம். ஊரில் தெப்போற்சவம் நடந்தால் அங்கு போய் இறைவனை வழிபடலாம்.

மாலை 6 மணி வரை விரதம் இருக்கலாம். இப்படி வழிபாடு செய்தால் நாம் செய்த, செய்து கொண்டு இருக்கின்ற பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும். அதற்காக நாம் வேண்டும் என்றே பாவங்கள் செய்து இப்படி பிராயசித்தம் தேடக்கூடாது. நம்மை அறியாமல் செய்த பாவத்துக்குத் தான் இது பொருந்தும்.

நாம் நடந்து போகும் போது நம் காலில் சிக்கி சின்னச்சின்ன உயிரினங்கள் எல்லாம் இறந்து போகின்றன. இவை எல்லாம் தெரியாமல் செய்த பாவம். முன்னர் செய்த பாவக்கணக்கு. இவை எல்லாம் இந்த நாளில் வழிபடுகையில் அது மறைந்து போகும். அதனால் எங்கிருந்தாலும் ஒரு குளத்தில் குளித்து விட்டு அங்கிருந்து தெய்வ வழிபாடு செய்வது உத்தமம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews