நடக்க வேண்டிய நல்ல காரியங்கள் தங்கு தடையின்றி நடக்க வழி காட்டும் தை அமாவாசை!

தை அமாவாசை நாளை (9.2.2024) வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் நாம் வழிபட வேண்டிய சரியான நேரம் குறித்துப் பார்க்கலாம்.

ஆடி அமாவாசை போல தை அமாவாசையும் ரொம்ப ரொம்ப முக்கியமானது. முன்னோர்களுக்கு செய்யக்கூடிய நீத்தார் கடனை சரியாக செய்தால் நமது வாழ்க்கையில் நடைபெறும் செயல்கள் தங்கு தடையின்றி நடக்கும்.

முன்னோர்களின் ஆசீர்வாதமும் எல்லோருக்கும் கிடைக்கும். நவக்கிரகங்கள் 9 உண்டு. இவை 9 வகையான தன்மையோடு நமது வாழ்க்கையில் பிணைந்துள்ளது. அதில் சூரியன், சந்திரன் இரண்டும் பிரதானமான கிரகங்கள். இவற்றில் சூரியன் தந்தை வழியுடன் தொடர்புடைய கிரகம். அதைப்போல தாய்வழியுடன் தொடர்புடைய கிரகம் சந்திரன்.

சந்திரனும், சூரியனும் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும் நாளில் நம் முன்னோர்களை வழிபாடு செய்தால் அது முழுமையாக அவர்களுக்குச் சென்றடைகிறது. அதுதான் அமாவாசை. அந்த நாளில் நாம் செய்யும் தர்ப்பணம், படையல், ஆலயங்கள், நீர்நிலைகளில் செய்யும் பிதுர் கடன், தானங்கள், தர்மங்கள், விளக்கேற்றி வழிபாடு செய்தல், தலங்களில் புனித நீராடல் இவை அனைத்துமே நம் முன்னோர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது.

அவர்களும் அதனால் மேல் உலகத்திற்கு உண்டான நலன்களைப் பெற்றுக்கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள். அதனால் தான் எல்லோரும் இந்த நாளில் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கிறார்கள்.

Thithi
Thithi

நாளை (9.2.2024) வெள்ளிக்கிழமை தை அமாவாசை வருகிறது. காலை 7.53 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.34 வரை அமாவாசை உள்ளது. இந்த நாளில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை தர்ப்பணம் செய்யலாம். சிறப்பான நேரம் என்றால் காலை 11.30 மணி முதல் 12.30 மணிக்குள் தர்ப்பணம் செய்யலாம். மதியம் 1.15 மணி முதல் 3 மணி வரை படையல் போடலாம். மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை விளக்கேற்றி வழிபடலாம்.

இந்த ஆண்டு நமக்கு அதிகாலையில் அமாவாசை இல்லாததால் 8 மணிக்கு மேல் தர்ப்பணம் செய்யலாம். காலை சூரிய உதயத்துக்குப் பின்பும், அது உச்சிப்பொழுதில் இருக்கும் வரை தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

நதித்துறைகள், கடல், ஏரி, குளம் ஆகிய புனித தீர்த்தங்களில் சென்று தர்ப்பணம் செய்யலாம். அந்த நாளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது தான் முக்கியம்;.

இந்த நாளில் பசு மாட்டிற்கு அகத்தீரையைக் கொடுப்பது மிகவும் சிறந்தது. தர்ப்பணம் முடித்ததும் 7 பேருக்காவது தாளிக்காத தயிர் சாதம் கொடுக்கலாம். அன்னதானமும் கொடுப்பது மிகவும் சிறந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews