வெற்றியைத் தரும் தைப்பூச வழிபாடு… எந்த நேரங்களில் முருகப்பெருமானை கும்பிடுவது என்று பார்ப்போமா?

வாழ்க்கையில் எல்லாவிதமான இன்னல்களும் மறந்து நன்மைகள் கிடைக்கச் செய்வது முருகன் வழிபாடு. முருகனுக்கு சக்தி ஞானவேலைத் தந்து அம்பிகையின் அருளைப் பெற்ற பரிபூரணமான தினம் தான் தைப்பூசம்.

அதனால் தான் வேல் வழிபாடு, காவடி வழிபாடு, பாதயாத்திரை செல்வது, விரதம் இருந்து வழிபடுவது, அன்னதானம் செய்வது என அனைத்து விஷயங்களையும் இந்தத் தைப்பூச நாளில் செய்வர். அதனால் முருகன் வேறு, வேல் வேறு என்று பிரித்து விட முடியாது. பல கோவில்களில் முருகப்பெருமானின் வேலை மட்டும் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இலங்கை, மலேசியா என உலகநாடுகள் பலவற்றிலும் இந்த வேல் வழிபாடு இருந்து வருகிறது. வேல் என்பது வெல் என்ற தொழில் பெயரின் மருவிய பெயர். வெல் என்றால் வெற்றி பெறு என்று அர்த்தம். வெற்றி வேண்டுமானால், வேலை வழிபட வேண்டும். வெற்றி வேண்டுமானால் ஞானம் வேண்டும். அதனால் தான் ஞானவேல் என்று பெயர் வைத்தார்கள்.

Vel
Vel

நமது கையின் அமைப்பும், வேலின் அமைப்பும் ஒன்றாகத் தான் இருக்கும். கையின் மேல் பகுதி கூராக இருக்கிறது. அப்படியே வேலின் மேல் பகுதியும் கூராக இருக்கிறது. நடுப்பகுதி விசாலமாகவும், அடிப்பகுதி ஆழமாகவும் இருக்கிறது. அதே போல தான் நமது கையும் இருக்கிறது. அதாவது அறிவுகூர்மையாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும்.

சிலர் நுனிப்புல் மேய்வது போன்ற அறிவைக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் கண்ணில் பார்த்ததையும், காதால் கேட்டதையும் வைத்து பேசி விடுவர். அதனால் பல பிரச்சனைகள் வருவதுண்டு. படிப்பு என்பது ஆழமாக இருக்க வேண்டும். நமது அறிவானது வேலைப் போல இருந்தால் அங்கு வெற்றி இருக்கும்.

அதனால் முருகப்பெருமானை வேலாகவும் வழிபடலாம். உருவமாகவும் வழிபடலாம். வேல் என்பது ஒரு ஆயுதம். வேலுக்கு மேல் ஒரு எலுமிச்சம்பழம் வைப்பார்கள். முருகனின் வேலின் வன்மையின் அளவைக் காட்டுவதற்காகத் தான். சிவபெருமான் மேதகிரி மலையை வில்லாக வைத்தாராம். அதுபோல முருகன் வேலின் மேல் உள்ள எலுமிச்சம்பழம் போல அந்த மலையை வைத்துள்ளாராம்.

எலுமிச்சம்பழம் வெற்றிக்கனி. வேல் வெற்றிக்குரியது. வீடுகளில் முருகர் படம் இருந்தால் போதும். அதை வைத்து சிறப்பாக வழிபாடு செய்யுங்கள்.

வரும் 25.1.2024 அன்று தைப்பூசம் வருகிறது. அன்று முழுவதும் பௌர்ணமி இரவு 11.56 வரை உள்ளது. அன்று காலை 9.14 மணிக்கு பூச நட்சத்திரம் தொடங்குகிறது. காலை 9.20 மணி முதல் 10.30 மணி வரை வழிபடலாம்.

மாலை 6.15 மணி முதல் 7.30 வரை வழிபாடு செய்யலாம். இந்த நேரங்களில் வழிபாடு செய்தால் நமது வழிபாட்டுக்கு நல்ல பலன் கிடைக்கும். எந்த மலராவது வைத்து அர்ச்சனை பண்ணலாம். நைவேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம். கந்தர் அலங்காரம் பாராயணம் செய்யலாம்.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews