மண்டல விரதம் இருப்பது எதற்காகன்னு தெரியுமா? அதுல இவ்ளோ விஷயங்கள் இருக்கா…?

மண்டல பூஜை என்றாலே அது ஐயப்ப பக்தர்கள் இருக்கும் விரதம் தான் நம் நினைவுக்கு வருகிறது. அது சரி. ஒரு மண்டலம் என்றால் 41 நாள்களா அல்லது 48 நாள்களா என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் உண்டு. எது சரி என்று பார்ப்போம்.

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் விரதம் இருப்பது 41 நாள்கள். அது ஒரு மண்டலம் எனப்படுகிறது. 45 நாள்கள் புராணங்களில் இருந்து ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.

பிரதமையில் இருந்து அமாவாசை வரையிலான 15 நாள்களை 3 திதிகாலமாக எடுத்தால் 45 நாள்கள் ஒரு மண்டலம். அதுபோல 48 நாள்கள் என்பது கோவிலில் கும்பாபிஷேகம் செய்தால் அப்போது மண்டலம் 48 நாள்கள். நவக்கிரகம், ராசி, நட்சத்திரம் இவைகளைக் கூட்டினால் (9+12+27) 48 நாள்கள். சித்தர்களின் வைத்தியமும் கோள் முறையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. அதற்கும் இந்த 48 நாள் தான் 1 மண்டலமாகக் கருதப்படுகிறது.

ஐயப்பனுக்கு என்றால் 41 நாள். வேத முறைப்படி 45 நாள். மண்டலாபிஷேகம், கும்பாபிஷேகம் செய்ய வேண்டியிருந்தால் 48 நாள்கள் தான் ஒரு மண்டலம். மருந்து சாப்பிடுவதற்கும் இந்த 48 நாள்கள் தான் ஒரு மண்டலமாகக் கணக்கிடப்படுகிறது.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார். இனி பிரபல ஜோதிடர் மகேஷ் ஐயர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். ஒரு மண்டல காலம் என்றால் 48 நாள்கள்.

நமக்கு பூர்வ ஜென்ம புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்பத்தில் பலன்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. அந்த பலாபலன்கள் நவக்கிரகங்கள் மூலமாக நமக்குக் கிடைக்கிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்பது தான் நவக்கிரகங்கள்.

இவற்றில் சந்திரன் என்பது துணைக்கோள். சனி, ராகு என்பன சாயா கிரகங்கள். அதாவது நிழல் கிரகங்கள். இந்த நவக்கிரகங்களால் நாம் ஆட்கொள்ளப்படுகிறோம். அதனால் தான் நல்லது கெட்டது உண்டாகிறது. ராசிகள் மொத்தம் 12. அதே போல மொத்த நட்சத்திரங்கள் 27.

Iyappa divotees
Iyappa divotees

இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கூட்டிப் பார்த்தால் (9 +12 +27 ) 48 வந்து விடுகிறது.
நம்மை மட்டுமே நாம் எப்போதும் சார்ந்து பார்க்கக்கூடாது. நமது வீட்டில் உள்ளவர்களின் ராசி நட்சத்திரங்களுக்கு ஏற்றாற்போலும், ஜாதகங்களில் உள்ள கிரகங்களுக்கு ஏற்பவும் நமக்கு பலன்கள் உண்டாகின்றன.

அதனால் தான் ஜோதிடர்கள் நமது கிரகங்களுக்கும் மட்டும் பார்க்காமல் ராசி, நட்சத்திரம், கிரகங்கள் என அனைத்தையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்து மண்டலத்தைக் கணக்கிடுகின்றனர்.

மண்டலம் என்றால் ஒரு வடிவமைப்பு. எண்களை உடைய எந்திரத்தையும் மண்டலம்னு தான் சொல்வாங்க. அந்தக் குறிப்பிட்ட எண்களுக்குள் நமது வேண்டுதல்களைப் போட்டு விட்டால் நிச்சயமாக அந்தக் காரியம் நிறைவேறும்.

அந்தக்கால கட்டத்தில் இறைவனைப் பிரார்த்தித்தால் எல்லா ராசிகளுக்கும் பரிகாரம் செய்த பலன்கள் கிடைக்கும்.

9 கிரகங்களுக்குப் பரிகாரம் செய்த பலன்கள் நமக்குக் கிடைக்கிறது. 27 நட்சத்திரங்களுக்கும் பரிகாரம் செய்த பலன்கள் கிடைக்கிறது. இவ்வளவு நாட்களும் நாம் கடவுளை நோக்கி தவம், விரதம், அபிஷேகம், பிரார்த்தனை செய்யும்போது இறைவன் நமக்கு அனுக்கிரகம் செய்கிறார். அந்த ராசி, நட்சத்திரம், கிரகங்களில் உள்ள தோஷங்கள் விலகுகிறது. இதுதான் மண்டல பூஜையின் மகத்துவம்.

மேற்கண்ட தகவலை பிரபல ஜோதிடர் மகேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.