டியர் திரை விமர்சனம்!.. ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை எப்படி இருக்கு?

சினிமாவில் திடீரென ஒரே மாதிரியான படங்கள் வரிசையாக வெளியாவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. என்னை அறிந்தால் மற்றும் காக்கிச்சட்டை திரைப்படங்கள் ஆர்கன் திருட்டை மையப்படுத்தி வெளியாகின. காமெடி பேய் படங்கள் வெளியானால் வரிசையாக காமெடி பேய் படங்கள் வரும்.

டியர் விமர்சனம்:

முன்னணி நடிகர் போலீசாக நடிக்க தொடர்ந்து பல நடிகர்களும் காக்கி சட்டையை போட்டுக் கொள்வார்கள். டாக்டர் வேஷம் போட்டாலும் டாக்டர் படங்களாக வந்து டார்ச்சர் செய்யும். அந்த வரிசையில் தற்போது இது குறட்டை வாரம் என்பதுபோல கடந்தாண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படத்தில் இடம்பெற்ற குறட்டை தான் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து நடித்து இன்று ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகியிருக்கும் டியர் படத்தின் கதையும்.

இதில் பெரிய வித்தியாசம் என்னவென்றால், குட் நைட் படத்தில் மணிகண்டன் குறட்டை விடுவார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விடுகிறார். நன்றாக நடிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே கஷ்டமான ரோலை எடுத்து செய்வார்கள். அதேபோல ஜிவி பிரகாஷை விட ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பால் அசத்தி விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இந்தப் படத்திலும் அவர்தான் ஸ்கோர் செய்கிறார்.

பொதுவாக ஹீரோயின்கள் இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்க மாட்டார்கள். ஆனால் அது போன்ற கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேடித்தேடி போய் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் காமெடி காட்சிகள் ரொம்பவே ரகளையாக ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

ஆனால் முதல் பாதியில் இருந்த சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் படத்தின் கதையைத் தாண்டி எங்கேயோ சென்று விட்ட உணர்வு ஏற்படுத்தி சலிப்பை கொடுக்கிறது.

பிரபல தொலைக்காட்சியில் வேலைக்கு சேருவதற்காக போராடி வரும் ஜிவி பிரகாஷ் குன்னூரில் குறட்டை விடும் ஐஸ்வர்யா ராஜேஷை திருமணம் செய்து கொண்டு சரியாக தூங்க முடியாமல் தவித்து வருகிறார். அதன் காரணமாக அவரது வேலையை போய் விடுகிறது. இதற்கு மேல் வாழ்க்கையில் நிம்மதி வேண்டும் என நினைக்கும் ஜிவி பிரகாஷ் விவாகரத்து பண்ண முடிவு செய்கிறார். ஆனால் அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகள், சண்டைகள் கடைசியாக இருவரும் ஒன்று சேர்கிறார்களா? அல்லது பிரிந்து தனித்தனியாக வாழ்கிறார்களா? என்பதுதான் இந்த டியர் படத்தின் கதை.

ஜிவி பிரகாஷ் வெள்ளிக்கிழமை ராமசாமி என கலாய்க்க பட்ட ஒரு நிலையில் ரெபல், கள்வன் படங்களைத் தொடர்ந்து இந்த வாரம் டியர் படத்தை கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவர் வழக்கம்போல நடிக்கவே முயற்சி செய்திருக்கிறார். ஆனால் ஒரு இடத்தில் கூட ஐஸ்வர்யா ராஜேஷை அவரால் நடிப்பில் வீழ்த்தவே முடியவில்லை. பாடல்களும் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. ஒளிப்பதிவு குன்னூரை இந்த சம்மருக்கு கூலாக கண்களுக்கு கடத்தி கைத்தட்டல் பெறுகிறது.

டியர்- கிழிந்த டயர்!
ரேட்டிங் – 2/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...