தோட்டுக்கடை ஓரத்திலே.. ஒண்ணாம் படி எடுத்து.. நாட்டுப்புறப் பாடல்களின் நாயகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்!

ஒரு பாடல் உங்கள் மனதைத் துளைத்து அந்தப் பாடல் நடைபெறும் சூழலுக்கே உங்களை அழைத்துச் செல்லுமானால் அந்தப் பாடலின் மகத்துவம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அப்படியான ஒரு பாடல்தான் “தோட்டுக்கடை ஓரத்திலே..“ இந்தப் பாடலைக் கேட்காத தமிழர்களே இருக்க முடியாது. குறிப்பாக கிராமங்களில் இன்றும் திருவிழாக்களின் போதும், பொங்கல் நிகழ்ச்சிகளின் போதும் இந்தப் பாடல் இடம்பெறாமல் அந்தத் திருவிழாக்கள் பூர்த்தியாகாது.

அந்த அளவிற்கு மண்வாசமும், கிராமத்து பின்னணியும், நாட்டுப்புற இசையும் நம்மை அந்தச் சூழலுக்கே அழைத்துச் செல்லும். இப்படி ஒரு நாட்டுப்புறப் பாடலை நமக்கு அளித்தவர்தான் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன். நாட்டுப்புறப் பாடல்களின் நாயகி என்றே இவரை அழைக்கலாம்.

ஊர் ஆலமரத் திண்ணைகளிலும், வயல்கள், மரத்தடிகளில் மட்டுமே பாடப்பட்டு காற்றில் கரைந்து கொண்டிருந்த நாட்டுப்புறப் பாடல்களை அழியாமல் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த விஜயலட்சுமி பின்னர் படிப்பை முடித்து மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புற கலை மையத்தின் பேராசிரியையாக பணிபுரிந்தார். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் அதே துறையில் பேராசிரியராக பணிபுரிந்தவரே.

“இவர நம்பி நடிக்க முடியாது..” இயக்குநருக்கு முதலில் டிமிக்கி காட்டிய பூர்ணிமா.. வெற்றியால் வாயை மூட வைத்த ஆர்.சுந்தர்ராஜன்

தங்களது பணியின் போதே மண்மணம் சார்ந்த நாட்டுப்புற கலைகள், பாடல்கள், கிராமியக் கூத்துகள் போன்றவற்றின்பால் மிகுந்த நாட்டம் ஏற்பட்டு அதனை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினர். இக்கலைகளை அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசை,நாடகம் கோலாட்டம் என பல கலைவடிவங்களை தொகுத்து கிராமிய இராமயணம் எனும் படைப்புகளை அரங்கேற்றி புகழ் பெற்றனர்.

கும்மிப்பாட்டு என்றாலே அதற்கான முகமாக விஜயலட்சுமி மாறினார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. கோயில் திருவிழாக்களில் இவர் எடுத்து வைக்காத கும்மி வகைகளே என்று சொல்லலாம். மேலும் இவரின் புகழ் பெற்ற பாடலான “தோட்டுக்கடை ஓரத்திலே“ என்ற நாட்டுப்புறப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இப்பாடல் திரைப்பட வடிவிலும் வந்துள்ளது. அதிலும் இவரே நடித்திருப்பார்.

மேலும் ஒண்ணாம் படியெடுத்து என்ற பாடலும் இன்றும் 40 வயதைக் கடந்தவர்களுக்கு பசுமரத்தாணி போல் பதிந்திருக்கும் ஒரு கிராமியப் பாடலாக உள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் தனியாக பாடல்களைப் பாடி வந்தவர் பின் தனது கணவர் நவநீதகிருஷ்ணன் துணையோடு நாட்டுப்புற பாடல்களில் தனி ராஜ்ஜியமே நடத்தினார்.

பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், பாடல்கள், பழமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாசாரங்கள், ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றை 5000 இசைத்தட்டுகளிலும், 300 வீடியோ காணொளிகளாவும் பதிவு செய்து பாதுகாத்து வருகின்றனர்.

இவர்களது இக்கலைச் சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவர்களுக்க பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் தமிழ்நாடு அரசும் கலைமாமணி விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

 

Published by
John

Recent Posts