ஈசனின் பெருமை – திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -17



பாடல்
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!

பொருள்..

சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக்கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர். நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல். பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக..

விளக்கம்..

முப்பெரும்தெய்வங்களில் மூத்தவரும், தேவாதிதேவர்களின் தலைவனுமான சிவனுடைய இன்பம் அடியார்களிடத்திலேயே உண்டென்பதை உணர்ந்து நமக்கு அருள் புரிந்தவர். நம்மீது கொண்ட பெருங்கருணையினால் உமையம்மையுடன் இப்பூலோகத்தில் வந்திருங்கி நமக்காக அருளும் சிவனை வணங்கி போற்றுவோம்! என இளைய அடியாரை அழைப்பதாய் அமைந்திருக்கு இப்பாடல்.

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்…

Published by
Staff

Recent Posts