குடும்பக் கதைகளின் நாயகன் விசு அப்படி என்ன மந்திரம் வச்சிருந்தாரு தெரியுமா?

பெரிய ஹீரோக்கள் கிடையாது. கமர்ஷியல் கிடையாது, பிரபலமான பாடல்கள் கிடையாது, த்ரில்லர் கிடையாது, மாஸ் கிடையாது. இப்படி சினிமாவிற்கு உண்டான இலக்கணங்கள் எதுவுமே இல்லாமல் தமிழ் சினிமா உலகில் வெற்றி நடை போட்டவர்தான் குடும்ப இயக்குநர் விசு.

ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் நிகழ்வுகளை இன்றைய மறைந்த இயக்குநர் ராசு மதுரவன் போல் 1980 காலகட்டங்களிலேயே சொல்லி அசர வைத்திருப்பார். மேடை நாடகங்களில் கோலோச்சிய விசு இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் மாணவர். திரைப்படங்களின் தலைப்பை வைத்தே இது விசு படம்தான் என்று கணிக்க முடியும் அளவிற்கு தனித்துவம் காட்டியிருப்பார்.

சம்சாரம் அது மின்சாரம், டௌரி கல்யாணம், திருமதி ஒரு வெகுமதி, மணல் கயிறு, நாணயம் இல்லாத நாணயம், அவள் சுமங்கலிதான், சிதம்பர ரகசியம், வரவு நல்ல உறவு, வேடிக்கை என் வாடிக்கை, போன்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் அதில் நடித்தும் உள்ளார்.

ஒரே படம் தான்.. ஓஹோன்னு ஹிட் ஆன பாடல்கள் : ஆனால் அட்ரஸே இல்லாமல் போன ஹீரோ

80களின் தமிழ் குடும்பங்களை புரிந்துகொள்ள விசு படங்களைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறெதுவும் இல்லை. இன்றைய உலகம் 80களின் உலகங்களிலிருந்து எவ்வவளவு மாறிவிட்டது என்பதை இவர் படங்களைப் பார்த்தால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

மேலும் மிக சீரியஸான விஷயங்களை காமெடி கலந்து சொல்வதில் வல்லவரான விசுவின் படைப்புகள் ஒவ்வொன்றும் குடும்ப உறவுகளின் மகத்துவம் பேசும். எனினும் அன்றைய காலகட்ட குடும்ப அமைப்புகளைக் கூறுவதால் சற்று ஆணாதிக்கம் அதிகமாகத் தோன்றும்.  மிக சிறிய பட்ஜெட்டில் கூட துப்பறியும் படம், நகைச்சுவையாக ஆனால் சுவாரஸ்யமாக எடுக்க முடியும் என்று காட்டி இருப்பார்.

நிறைய மசாலா படங்களுக்கு கதை வசனம் எழுதி இருக்கிறார் விசு. குறிப்பாக ரஜினியின் Mr. பாரத், நல்லவனுக்கு நல்லவன், நெற்றிக்கண், தில்லு முல்லு, புது கவிதை, மற்றும் கமலின் சிம்லா ஸ்பெஷல் போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.

சம்சாரம்  அது மின்சாரம் படத்தில் மனோரமாவுடன் இவர் பேசும் டயலாக்குகள் இன்றும் தமிழ் சினிமா வசனகார்த்தாக்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் பொக்கிஷப் படைப்புகள். இதனால் தான் விசு அன்றும், இன்றும், என்றும் குடும்ப உறவுகளின் நாயகன் என்று போற்றப்படுகிறார்.

சன்டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் இவருக்கு உலகமெங்கிலும் பெரும் புகழை ஈட்டித் தந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews