பாரதிராஜாவை தனது பாணியில் கண்டித்த பார்த்திபன்.. எதற்கு தெரியுமா?

திரைக்கதை ஜாம்பவானும், இயக்குநருமான பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றுக் கொண்டு பின் புதிய பாதை படத்தின் மூலம் தனக்கென தனிஅடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டவர் நடிகர் பார்த்திபன். முதல்படத்திலேயே ஒரு ஏரியா ரவுடி ஒரு பெண்ணால் திருந்துவது போன்றதொரு வலுவான திரைக்கதையை தனது ஆசானைப் போல் அமைத்து அந்தப் படத்தினை மாபெரும் வெற்றிப் படமாக மாற்றினார்.

ஆனால் ஹீரோவுக்கான எந்த அடையாளமும் இல்லாதிருந்த பார்த்திபனை அடுத்த ரஜினிகாந்த் என்னும் அளவிற்குப் பேசத் துவங்கி விட்டனர். ஆனால் அடுத்தடுத்து வந்த படங்கள் சறுக்கலாக அமைந்தன. இரண்டாவதாக அவர் எடுத்த பொண்டாட்டி தேவை படம் தோல்வியைத் தழுவியது. இதேபோல் மூன்றாவதாக வந்த சுகமான சுமை படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றியைத் தரவில்லை. இதனால் மனம் துவண்டு போன பார்த்திபன் கமர்ஷியல் பார்முலாவிற்கு வந்தார்.

ராமராஜனுக்கும் இயக்குநர் சேரனுக்கும் இப்படி ஓர் உறவா? வீடு தேடிச் சென்று பாராட்டிய குணம்

அப்போது இயக்குநர் பவித்ரனின் பிரபுதேவா, ரோஜாவை வைத்து எடுக்கப்பட்ட இந்து படத்தில் அதிகமான இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டு இயக்கிய ஒரு படம் ஹிட் ஆனது. எனவே பார்த்திபனும் தன்னுடைய மேக்கிங் ஸ்டைல், கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து உள்ளே வெளியே என்ற படத்தினை எடுத்தார். ஆரம்பத்தில் இந்தப் படத்திற்கான கதையில் நடிகைகள் தயங்கிய வேளையில் சுகன்யா ஒப்பந்தமானார். பிறகு சில நாட்கள் நடித்து விட்டு தன்னால் இயலாது என்று கூறி விட, அதன்பிறகு அப்போதுதான் திரையுலகில் அடியெடுத்து சில படங்களில் நடித்த ஐஸ்வர்யாவை ஹீரோயினாகப் போட்டார்.

மேலும் கவர்ச்சியும் சற்று கூடுதலாக வைக்கப்பட்டது. கதைப்படி குப்பத்து மக்களால் வளர்க்கப்படும் ஒருவன் ரவுடித்தனம் செய்து பின் எப்படி போலீஸாக மாறுகிறான் என்பதுதான். இந்தக் கதையை ஒட்டியே பின்னாளில் பல படங்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி உள்ளே வெளியே படம் சென்னை சபையர் தியேட்டரில் மட்டும் 100 நாட்கள் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தான் என்ன நினைத்தாரோ அதை அப்படியே எடுத்து மீண்டும் பார்முக்கு வந்தார் பார்த்திபன்.

இந்தப்படத்தின் பிரிவியூ காட்சியைப் பார்த்த பாரதிராஜா ஏன் இப்படி இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளது என்று பார்த்திபனை கடிந்து கொண்டாராம். ஆனாலும் படம் வெற்றிபெற்றதே தவிர விமர்சனத்தில் படுமொக்கை வாங்கியது. இதனால் பார்த்திபன் கவலை அடைந்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு பாரதிராஜா கருத்தம்மா என்ற படத்தினை எடுத்து அதில் வடிவேலுவின் காட்சிகளில் இரட்டை அர்த்தம் வசனங்கள் இடம்பெறுவதாக எடுத்திருப்பார். அப்போது இதைக் கவனித்த பார்த்திபன் பாரதிராஜாவுக்கு பதில் கண்டனத்தைப் பதிவு செய்தார். ஏனெனில் ஒரு படத்தின் வெற்றிக்கு சில காட்சிகள் தேவைப்படுகிறது என்றால் அதை கண்டிப்பாக வைத்துத்தான் அதை வியாபாரம் செய்ய வேண்டியிருக்கிறது. பாரதிராஜாவும் இதையேதான் செய்தார்.

மேற்கண்ட தகவலை யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews