கவுண்டமணி மாதிரி பெரிய ஆளா வரணும்.. கனவாகவே முடிந்த போண்டாமணியின் வாழ்க்கை துயரம்..

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டாமணி நேற்று (23.12.2023) காலமான நிலையில் அவரது திரையுலக வாழ்க்கை பயணம் குறித்து தற்போது பார்ப்போம்.

நடிகர் போண்டாமணி இலங்கையை சேர்ந்தவர். இவர் அங்கே போர் நடந்த போது அகதியாக தமிழகத்திற்கு வந்து பின்னர் இங்கேயே தங்கிவிட்டார். இவரது நிஜ பெயர் கேத்தீஸ்வரன். சினிமாவில் பல இடங்களில் வாய்ப்பு கேட்டு அலைந்து கொண்டிருந்த போண்டாமணி, தீவிர கவுண்டமணி ரசிகராக இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தனது பெயரை கவுண்டமணி போலவே போண்டாமணி என்றும் மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில் தான் பாக்யராஜின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அவரது இயக்கத்தில் உருவான ’பவுனு பவுனுதான்’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார் போண்டாமணி. அதன்பின் அவருக்கு ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

bondamani2

மணிக்குயில், பொன்விலங்கு, தென்றல் வரும் தெரு, ராவணன், பாட்டு பாடவா ஆகிய படங்களில் நடித்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ திரைப்படத்திலும், அருணாச்சலம் திரைப்படத்திலும் அடுத்தடுத்து போண்டாமணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 150-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த அவரது காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது. அதிலும் ‘அடிச்சு கூட கேட்பாங்க, அப்பவும் சொல்லிராதீங்க’ என்ற வசனத்தில் வடிவேலுவுடன் அவர் இணைந்து நடித்த காட்சி இன்று வரை சிறந்த மீம் மெட்டீரியல் ஆகும்.

கடந்த 1991 முதல் 2023 ஆம் ஆண்டு அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை நடித்துக் கொண்டு தான் இருந்தார். இந்த ஆண்டு மட்டும் அவர் ’ஸ்ட்ரைக்கர்’ மற்றும் ’வா வரலாம் வா’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

bondamani1

இந்த நிலையில் நடிகர் போண்டா மணி சமீபத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது இரண்டு சிறுநீரகங்கள் செயல் இழந்த நிலையில் பல நடிகர்கள் அவருக்கு உதவி செய்தனர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக இவர் நடிக்கவில்லை என்பதால் வருமானமும் இல்லாமல் இருந்தார்.

நடிகர் போண்டாமணி திரையுலகில் மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். திமுகவில் உள்ள சில நிர்வாகிகளை அழைத்து கொண்டு அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பதும் தேர்தலின் போது அதிமுகவுக்காக அவர் பிரச்சாரம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

bondamani

இதனிடையே, திடீரென நேற்று அவர் தனது வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் குடும்பத்தினர் உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த நிலையில் தங்களது குடும்பத்திற்கு தனது தந்தையின் வருமானம் மட்டுமே இருந்தது என்றும் இனிமேல் தங்கள் குடும்பத்தை நடிகர் சங்கம் அல்லது அரசுதான் காப்பாற்ற வேண்டும் என்றும் போண்டாமணியின் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...