சிவலோகம் -தேவாரப்பாடலும், விளக்கமும்


பாடல்..
வேயி னார்பணைத் தோளியொ டாடலை வேண்டி னாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயி னாய்இடு காட்டெரி யாடல்அ மர்ந்தவனே
தீயி னார்கணை யால்புரம் மூன்றெய்த செம்மை யாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயி னாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே

விளக்கம்..
மூங்கிலைப் போன்ற பருத்த தோளுடைய காளியொடு திருக்கூத்தாடுதலை விரும்பினவனே, விகிர்தனே, வணங்கிய உயிர்கட்கு அருளமுதமாகியவனே, இடுகாட்டின் தீயில் ஆடுதலை விரும்பியவனே, தீக்கடவுளைக் கூரிய முனையாக் கொண்ட திருமாலாகிய கணையால் திரிபுரத்தை எய்த செம்மையனே, திருவருளாகி விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தைத் திருநடங் கொள்ளும் இடமாக விரும்பியவனே, நின் கழலடிகளையே தொழுது சிவலோகத்தை அடைவோம்.

Published by
Staff