இவரு பாக்காத பிரச்சனையே இல்ல.. சினிமாவிலும், சின்னத்திரையிலும் வில்லத்தனமான நடிப்பால் கவர்ந்த பப்லு..

திரைப்படங்கள் மூலம் நினைத்த அளவுக்கு சில பிரபலங்களுக்கு புகழ் கிடைக்காமல் போனாலும், சின்னத்திரையின் மூலம் நினைத்ததை விட அதிக புகழை அடைவார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு நடிகர் தான் பப்லு. இவர் ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் முக்கிய கேரக்டர்களில், குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்த நிலையில் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தான் தனது நடிப்பு திறமையை நிரூபித்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பப்லுவுக்கு சிறு வயதிலேயே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ’நான்கு சுவர்கள்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த ’நீதி’, ’டாக்டர் சிவா’ ஆகிய படங்களிலும் எம்ஜிஆர் நடித்த ’நாளை நமதே’, சிவாஜி நடித்த ’பாரதவிலாஸ்’, சிவாஜி மற்றும் ரஜினிகாந்த் நடித்த ’நான் வாழ வைப்பேன்’ ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

அதன் பிறகு ’நான் சிகப்பு மனிதன்’ ’பந்தம்’ ’ஒரு தாயின் சபதம்’ உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த அவர் இரண்டாவது ஹீரோ,  வில்லன் மற்றும்  குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தார். பாண்டி நாட்டு தங்கம் என்ற திரைப்படத்தில் கார்த்திக்குடன் இணைந்து நடித்த அவர் மனைவி ஒரு மாணிக்கம், சிகரம், கும்பக்கரை தங்கையா, பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அழகன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு  ரசிகர்கள் மத்தியில் பிரபலமான படம் என்றால் அது பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான வானமே எல்லை திரைப்படம் தான்.

babloo1

அதன் பின்னர் ’நான் பேச நினைப்பதெல்லாம்’ ’பிரியங்கா’  ’புதிய மன்னர்கள்’ ’தாய் மனசு உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் 1998 முதல் 2001 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். அதன்பின்னர் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்தார்.

குறிப்பாக மர்ம தேசம் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ரமணி வெர்சஸ் ரமணி, அரசி, கோகுலத்தில் சீதை உள்பட தொலைக்காட்சி சீரியல் நடித்தார். வாணி ராணி என்ற சீரியலில் அவர் ராதிகாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். அந்த சீரியல் பப்லுவை அனைத்து தமிழ் வீட்டிலும் கொண்டு சேர்த்தது. தற்போது கூட அவர் ஜெமினி டிவியில் ஒரு தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்த பப்லு ஒரு சில தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். ஜோடி நம்பர் ஒன் என்ற விஜய் டிவி ஷோவில் தோன்றியவர் அதன் பின்னர் வணக்கம் தமிழா,  மாத்தி யோசி, கலாட்டா குடும்பம் உட்பட பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்.

babloo2

நடிகர் பப்லு, கடந்த 1994 ஆம் ஆண்டு பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டு தனது மனைவியை பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு  57 வயதான பப்லு, ஷீத்தல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணம் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில் அவர் தைரியமாக பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்து தன்னுடைய திருமணம் குறித்து பதில் அளித்தார்.

குழந்தை நட்சத்திரம் முதல் டிவி தொடர்கள் வரை பலவிதமான கேரக்டர்களை நடித்த பப்லு, சமீபத்தில் ஹிந்தியில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இன்னும் திரையுலகிலும், சின்னத்திரையிலும் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.