சென்னையில வெள்ளம் வந்தப்போ ஓடி வந்து உதவுன மனுஷன்.. கேப்டனை தான் இப்ப மிஸ் பண்றோம்.. ஏங்கிய சென்னைவாசிகள்!

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், சென்னை அருகே கரையை கடக்கும் என கருதப்பட்ட நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையைக் கடந்திருந்தது. முன்னதாக, புயல் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது.

அது மட்டுமில்லாமல், சென்னை மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், அத்திவாசிய பொருட்களை வாங்கி வைக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்ததால், ஒட்டுமொத்த பகுதியும் நீரில் மூழ்கிப் போனது. பலரும் வீட்டில் முடங்கிக் கிடந்த நிலையில், மின்சாரம் இல்லாமலும், மொபைல் சிக்னல் இல்லாமலும் அவதிக்குள்ளாகினர். பல மணி நேரமாக பெய்த பெருமழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்தும், சாலைகள் சேதமடைந்தும் காணப்பட்டது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளிட்டவை முடிந்த வரையிலான நிவாரண உதவிகளை செய்துள்ளது.

தொடர்ந்து புயல் நெல்லூர் அருகே கரையை கடந்த பின், ஓரளவுக்கு வெள்ளம் குறையவும் தொடங்கி மின்சாரமும் பல இடங்களில் சீராகி வருகிறது. இதனால், சென்னை மக்களும் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். டிசம்பர் மாதம் மழை எச்சரிக்கை என்றாலே சென்னை மக்கள் பயப்பட ஆரம்பித்தது 2015 ஆம் ஆண்டு தான். 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி ஆரம்பித்த மழை, சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை தொடர்ந்து பெய்ய, பல இடங்களில் வெள்ளப்பெருக்கு உருவானது.

பலரும் உணவு இல்லாமல் வீட்டிலேயே முடங்கி போக, மற்ற அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து உணவு பொருட்கள் அனைத்தும் சென்னை மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் அந்த சமயத்தில் இருந்த எந்த மக்களாலும் அந்த வெள்ளப்பெருக்கை வாழ்நாளில் மறந்து விட முடியாது. மேலும் அந்த சமயத்தில், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், மற்ற அரசியல் கட்சிகளை போல ஒதுங்கி இருக்காமல் களத்தில் இறங்கி பல நிவாரண உதவிகளையும் செய்திருந்தார். தொடர்ந்து ஓயாமல் உழைத்த விஜயகாந்த், முடிந்தவரை தன்னாலான உதவிகளை செய்திருந்த சூழலில், சென்னை மக்களுக்கு உதவிய பலருக்கும் தனது நன்றிகளையும் அப்போது தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு சென்னையில் வர்தா புயல் வந்த போதும் கூட, விஜயகாந்த் பல நிவாரண உதவிகளை செய்திருந்தார். இந்த நிலையில், தற்போது சென்னையில் மழை பெய்து வரும் சூழலில், பலரும் விஜயகாந்த் இருந்திருந்தால் நிலையே வேறு என ஏக்கத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர். விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து வருகிறார். அவர் உடல்நிலை குறித்து சில வதந்திகளும் பரவியிருந்த நிலையில், அவர் முன்பு இருந்தது போல, கம்பீரமான குரலுடன் திரும்ப மீண்டு வர வேண்டும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஒரு வேளை விஜயகாந்த் உடல்நிலை தற்போது சீராக இருந்திருந்தால், உதவி இல்லாமல் தவிக்கும் பலருக்கும் தனது அன்புக்கரங்கள் கொண்டு இயன்ற உதவிகளை செய்திருப்பார் என்பது தான் மக்கள் பலரின் கருத்தாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...