அமைதியாக சாதித்த அயோத்தி.. ஆர்ப்பரித்த மாமன்னன்…வெற்றிக் காற்றை சுவாசித்த விடுதலை | சென்னை சர்வதேச திரைப்பட விழா

உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியான சிறந்த படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். அந்தவகையில் தற்போது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப்படங்கள் வரிசையாக வெற்றி பெற்று தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளன.

கடந்த டிசம்பர் 14-ம் தேதி தொடங்கிய 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளைச் சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட்டது. இதில் அயோத்தி, மாமன்னன்,விடுதலை, இராவண கோட்டம், செம்பி, அநீதி, போர்த்தொழில் போன்ற 12 தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டன.

வெற்றி வாகை சூடிய அயோத்தி

இயக்குநர் மந்தரமூர்த்தியின் இயக்கத்தில் சசிக்குமார், புகழ் நடித்த அயோத்தி படம் சிறந்த படமாகத் தேர்வானது. இப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு முதல்பரிசாக ஒரு லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவதாக உடன்பால் திரைப்படமும், மூன்றாவதாக வெற்றிமாறனின் விடுதலை பாகம்1-ம் தேர்வானது.

சிறந்த நடிகருக்கான விருதை மாமன்னன் படத்திற்காக வடிவேலு பெற்றார். அயோத்தி படத்துக்காக ப்ரீத்தி அஸ்ரானிக்கு சிறந்த நடிகை விருதும், போர்தொழில் பட ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி சிறந்த ஒளிப்பதிவாளராகவும், போர்தொழில் பட எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் சிறந்த எடிட்டராகவும், மாமன்னன் படத்தில் பணியாற்றிய சுரேன் சிறந்த ஒலிப்பதிவாளராகவும், சிறந்த குறும்படமாக பகவத் இயக்கிய லாஸ்ட் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டது. உலக சினிமா பிரிவிலும் விருதுகள் வழங்கப்பட்டது.

காமெடிப் படம் தான்: ஆனா காட்சிக்குக் காட்சி இப்படி ஒரு கருத்தா? 1941-ல் வியக்க வைத்த தமிழ்ப்படம்

சிறப்பு ஜுரி பிரிவில் விடுதலை படத்தினை இயக்கிய வெற்றி மாறனுக்கு ரூ.50,000 பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. உலக சினிமா பிரிவை பொறுத்தவரை, சிறந்த திரைப்படமாக ருமேனியா நாட்டை சேர்ந்த டியூட் கியூர்கியு இயக்கத்தில் உருவான Freedom படம் தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவது சிறந்த படமாக பிரேசில் நாட்டை சேர்ந்த Nilding Country திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இது குறித்து பட விழாவில் வெற்றி மாறன் கூறுகையில், “படங்களை உருவாக்கும்போது படத்தின் கதைக்களவும், ஜனரஞ்சகத்தன்மையும் பாதிக்காதபடி சில சமரசங்கள் செய்து கொள்கிறோம். அதனால் அவை சில நேரங்களில் சாதாரணமான படமாக வெளிவரும். நிறைய குறைகள் தவறுகளோடுதான் படங்களை எடுத்து முடிக்கிறோம். கதையின் நோக்கம் அந்தக் குறைகளை மறக்கடிக்கச் செய்கிறது. சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் கதையாடல்களை நிகழ்த்தும் நோக்கத்தில் படங்களை எடுக்கிறோம். அதற்குத் தான் இந்தப் பாராட்டுகளும், அங்கீகாரமும் என நான் நம்புகிறேன். விடுதலை போன்ற படத்திற்கு இந்தப் பாராட்டு கிடைத்திருப்பது மகிழ்ச்சி“ எனக் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.