கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்… தந்தையின் ஆசிர்வாதத்துடன் களமிறங்கும் சண்முக பாண்டியனின் படைத்தலைவன்…

தே. மு. தி. க கட்சியின் தலைவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் கட்சிப் பணிகளை கவனித்து கொண்டிருக்கையில், அவரின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். தனது தந்தையை போலவே தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற வேண்டும் என்று பயணித்து கொண்டிருக்கிறார்.

அதன்படி, 2015 ஆம் ஆண்டு வெளியான ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 2018 ஆம் ஆண்டு வெளியான பி. ஜி. முத்தையா இயக்கத்தில் உருவான ‘மதுர வீரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் வரும் ‘உன் நெஞ்சுக்குள்ள வாழ நான் ஏங்குறேன்’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சண்முக பாண்டியனின் அடுத்த படமான ‘படைத்தலைவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை X தளத்தில் வெளியிட்டார். அதன் பின்பு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் படப்பிடிப்பு சற்று தாமதம் ஆகவே, தற்போது படப்பிடிப்பு முடிந்த தருவாயில் ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது.

டைரக்டர்ஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய யு. அன்பு இப்படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். எம். எஸ். பாஸ்கர், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கதையை கேட்டு ஓகே செய்தது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தானாம். அதனால் சண்முகபாண்டியன் இப்படத்தில் கூடுதலாக கவனம் எடுத்து நடித்தாராம். காட்டிற்குள் இருக்கும் வாழ்வியல் முறையை சார்ந்தபடமாதத்தால் இப்படத்தின் படப்பிடிப்புகளை கேரள காடுகளில் எடுத்துள்ளனர். நீண்டு தொங்கும் முடியோடு யானைகளுடன் இருப்பது போன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது. அதனால் யானைக்கு இப்படத்தில் முக்கியத்துவம் இருக்கலாம். தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி ‘படைத்தலைவன்’ ரிலீசுக்கு தயாராகி கொண்டிருக்கிறது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...