சாப்பாடு கேட்டாலே இதான் நிலைமை.. விஜயகாந்த் சந்திச்ச அவமானங்கள்.. சினிமாவில் ஜெயிச்சு ஊரெல்லாம் சாப்பாடு போட்ட தங்க மனசு..

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து பின்னர் தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். மிகுந்த வேதனைகளுக்கு மத்தியில் தனது கனவை நோக்கிய பயணத்தில் எந்த தடையும் போடாமல் ஜெயித்த விஜயகாந்த், ரஜினி மற்றும் கமல் என கோலோச்சிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தையும், ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொண்டார்.

பொதுவாக, விஜயகாந்த் படங்கள் என்றாலே அவற்றில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். நாட்டுக்காக சண்டை போடும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும், போலீஸ் உள்ளிட்ட கதாபாத்திரங்களிலும் அதிகம் நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர் விஜயகாந்த். இது ஒரு பக்கம் இருக்க வைதேகி காத்திருந்தாள், சின்ன கவுண்டர், வானத்தைப்போல, ரமணா, எங்கள் அண்ணன் என குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சூப்பர் ஹிட் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய விஜயகாந்த், அதன் பின்னர் திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல், முழுக்க முழுக்க அரசியலிலும், நலத்திட்ட பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த், முதல் தேர்தலிலேயே வெற்றி பெறவும் செய்தார். தொடர்ந்து, அரசியலில் பலம் வாய்ந்த தலைவராக விஜயகாந்த் உருவாகி வந்த சமயத்தில் அவரை மீம் மெட்டிரியலாக மாற்றி பலரும் கேலி செய்தனர்.

இதற்கிடையே, அவரது உடல்நிலையும் மோசமாக கடந்த சில வருடங்களாக அவர் அதிகம் பொது இடங்களில் தோன்றாமலும் இருந்து வருகிறார். மேலும், விஜயகாந்தை கலாய்த்த பலரும் இப்போது அவர் முதல்வராகி நல்லாட்சி நடத்தி இருக்க வேண்டியவர் என ஏக்கத்துடன் தெரிவித்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, விஜயகாந்த் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் அவர் சந்தித்த அவமானங்கள் குறித்த செய்தியை காணலாம். விஜயகாந்த் பிரபலம் ஆவதற்கு முன்பாக ஒரு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் மேக்கப் போட்டுவிட்டு அவர் தயாராக இருந்ததாக தெரிகிறது. ஹீரோயின் வர தாமதமான நிலையில், தனக்கு பசி எடுக்க, போய் சாப்பிடவும் சென்றுள்ளார் விஜயகாந்த். இதனை அறிந்த தயாரிப்பாளர், ஹீரோயின் வருவதற்குள் என்ன அவசரம் என கோபத்தில் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இப்படி பல அவமானங்களை சந்தித்த விஜயகாந்த், விசு இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த போது தனக்கு பசி எடுப்பதாகவும், சாப்பாட்டை மேலே கொண்டு வரும்படி கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இவர் பெரிய இவரு, கீழ வந்து சாப்பிடமாட்டாரு என அவர் காதுபட அங்கிருந்தவர் கேட்டதாகவும் தெரிகிறது. இப்படி பல தடைகளை கடந்த வந்த விஜயகாந்த், தான் பெரிய நடிகரான பிறகு, சினிமாவில் கடைநிலை ஊழியர்களாக இருக்கும் நபர்கள் வரை நேசித்ததுடன் அவர்களுக்கு தன்னாலான உதவியையும் செய்து கொடுத்தார்.

அதே போல, ஹீரோ தொடங்கி கடைநிலை ஊழியன் வரை ஷூட்டிங்கில் சரிசமமாக உணவு பரிமாறப்பட்ட வேண்டும் என நிபந்தனை விதித்த விஜயகாந்த், தனது சொந்த செலவிலும் இந்த பணிகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.