“இதுக்குத்தான் மத்த ஆம்பளைங்க லாயக்கா?“ : பிக்பாஸில் பிரதீப் வெளியேறியது குறித்து கொதித்த ஷகிலா

மற்ற எந்த சீசன்களைப் போல் அல்லாமல் பிக்பாஸ் சீசன் 7 சற்று காரசாரமாகத்தான் போய்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே ஜோவிகா, யுகேந்திரன், கூல்சுரேஷ், விசித்ரா போன்ற பங்கேற்பாளர்கள் அவ்வப்போது சில கருத்துக்களை வெளியிட பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

தற்போது இந்தப் பரபரப்பு பேச்சுகள் அடங்குவதற்கு முன் பிரதீப் ஆண்டனிக்கு ஆண்டவர் கொடுத்த ரெட் கார்டு பற்றித்தான் சோஷியல் மீடியாவே பற்றி எரிகிறது. பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் பிரதீப் செயல்படுகிறார் என்று மாயா, பூர்ணிமா, ஜோவிகா, மணி சந்திரா ஆகியோர் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்க பிக்பாஸ் வீட்டில் முடிவுக்கு வந்தது பிரதீப் ஆண்டனியின் ஆட்டம்.

கமல் அவரிடம் பேசும் போது எந்த எதிர்ப்பையும் காட்டாமல் புன்னகை ஒன்றையே பதிலாகத் தந்துவிட்டு ரெட்கார்டு பெற்று வீட்டிலிருந்து வெளியேறினார். நேற்று உலகநாயகனின் பிறந்தநாளுக்குக் கூட பிக்பாஸ் ரெட்கார்டைக் காட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார் பிரதீப் ஆண்டனி.

இவ்வாறு இருக்க பிரதீப்புக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இது வேண்டுமென்றே சொல்லப்பட்ட பழிச்சொல் எனவும், கமல் அவசர முடிவு எடுத்துவிட்டார் எனவும் கருத்துக்களைத் தெரிவிக்க நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான ஷகீலா சற்று காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரெட் கார்டு வாங்கிய பிரதீப் ஆண்டனி.. ஆனால், ட்விஸ்ட்டு?

அதில், “பிரதீப் விலக காரணமான மாயா போன்ற ஒரு போலியான பெண்ணைப் பார்த்ததில்லை என்றும், அவ்வாறு பாதுகாப்பு இல்லையென்றால் எப்படி நீங்கள் அண்ணன் தங்கையாகப் பழகியிருக்க முடியும்“ என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “பிரதீப் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தால் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்தால் மற்ற ஆம்பளைங்க காப்பாத்த மாட்டாங்களா என்றும், சுடிதார் அயர்ன் பண்ணிக் கொடுக்கவும், லவ் டயலாக் பேசவும்தான் இவங்க லாயக்கா“ என்றும் சகட்டு மேனிக்கு வசைபாடியுள்ளார். இவ்வாறு பிரதீப்க்கு ஆதரவாக ஷகீலா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகை ஷகீலா கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே இதுபோன்று பேசியது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews