சிறு வயதில் தோன்றிய நடிப்பு ஆர்வம்.. பாட்டி ஆன பின்பும் சினிமாவில் தடம் பதித்த நிர்மலம்மா.. தளபதி படத்துல கவனிச்சு இருக்கீங்களா?

தென் இந்திய சினிமாவில் பல ஆண்டுகள் கோலோச்சி நின்றவர் நடிகை நிர்மலம்மா. இவர் ஆந்திர மாநிலத்தில் கடந்த 1920 ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே கல்வியை விட அவர் கலையில் அதிக ஆர்வம் காட்டினார். இதனை அறிந்து கொண்ட அவரது பெற்றோர் நிர்மலாவுக்கு நடனம், நாட்டியம், பாடல் ஆகியவற்றை சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளையும், கோப்பைகளையும் வென்றெடுத்தார்.

இந்த நிலையில் நாடகத்துறையில் பங்கேற்க வேண்டும் என்று நிர்மலம்மா தனது பெற்றோரிடம் தனது விருப்பத்தை தெரிவித்ததையடுத்து அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். இதனால், 10 வயதில் அவரது முதல் நாடகம் அரங்கேறியது. பெரும்பாலும் புராண நாடகங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

nirmalamma1

இந்த நிலையில் தான் 1956 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் அவர் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு ஏராளமான தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அவர் ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான ‘திருமலை தென்குமரி’ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர் அமைந்ததுடன் அதனை சிறப்பாகவும் பயன்படுத்தி கொண்டார்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் அவர் மாறி மாறி நடித்தார். கமல்ஹாசன், ராதிகா நடிப்பில் கே. விஸ்வநாத் இயக்கத்தில் உருவான ’சிப்பிக்குள் முத்து’ என்ற படத்தில் கமல்ஹாசனின் பாட்டியாக நடித்து அசத்தியிருப்பார். அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ திரைப்படத்தில் கூட்ஸ் ரயில் வண்டியில் வரும் குழந்தையை எடுத்து வளர்க்கும் பாட்டியாக நடித்திருப்பார்.

நிர்மலம்மா நடிப்பை முழு அளவில் வெளியே கொண்டு வந்தவர் என்றால் அது பாக்யராஜ் தான். அவரது இயக்கத்தில் உருவான ’ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ என்ற படத்தில் பாட்டி கேரக்டரில் நடித்து இருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட நிர்மலம்மா கேரக்டர் தான் படத்தின் முதுகெலும்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

nirmalamma

இதனை அடுத்து ஏராளமான தமிழ் படங்களில் அம்மா மற்றும் பாட்டி வேடங்களில் நடித்த நிர்மலம்மா விஜய் நடித்த ’கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ என்ற படத்தில் நாயகி சங்கவியின் பாட்டியாக நடித்திருப்பார். இது அவரின் கடைசி தமிழ் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில தெலுங்கு படங்களில் அவர் நடித்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி காலமானார்.

நடிகை நிர்மலம்மா, கிருஷ்ணராவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் கவிதா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தனர். சிறு வயது முதல் நடிப்பு உலகத்தில் காலடி எடுத்து வைத்த நிர்மலம்மா பாட்டி கதாபாத்திரங்கள் வரை நடித்துள்ளதுடன் தெலுங்கில் அனைத்து கதாநாயகர்களுடனும் இணைந்து நடித்த சிறப்பையும் பெற்றுள்ளார். 800 படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவரது நடிப்பு என்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.