பிறந்த 21 நாட்களில் நடிப்பு.. மூன்றரை வயதில் தேசிய விருது வாங்கி அந்த காலத்திலேயே கவனம் ஈர்த்த நடிகை..

குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் தோன்றி பலரும் தங்கள் நடிப்பின் மூலம் மக்கள் மனம் கவர்ந்து குறிப்பிட்ட வயதிற்கு பிறகு நிறைய படங்களில் முன்னணி நடிகராகவோ, நடிகையாகவோ கூட உயர்வார்கள். ஆனால் பிறந்த 21 நாட்களில் நடிக்க வந்து மூன்றரை வயதிலேயே சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை ஒரு நடிகை வென்றார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி ஒரு நடிகையை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.

குழந்தை நட்சத்திரமாக கடந்த 1964 ஆம் ஆண்டு முதலில் நடிக்க தொடங்கியவர் ராணி. இவரது முழு பெயர் ராணி ருத்ரமாதேவி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் இவர் பெரியவர் ஆனதும் நாயகியாக கூட முக்கிய கேரக்டரில் நடித்து பெயர் எடுத்திருந்தார்.

1964 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு படத்தில் பிறந்து 21 நாள் இருக்கும் போது ராணி நடித்தார். அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு வாழ்க்கை படகு என்ற தமிழ் படத்திலும் சில தெலுங்கு படத்திலும் நடித்தார். ஆனாலும் அவருக்கு புகழை பெற்று தந்த திரைப்படம் என்றால் அது பத்மினி, ஜெமினி கணேசன் நடித்த சித்தி என்ற படம் தான். இந்த படத்தில் குழந்தை ராணி கேரக்டர் தான் முக்கியமாகவும் அமைந்திருந்தது.

அதன் பிறகு பொண்ணு மாப்பிள்ளை, சங்கீத லட்சுமி போன்ற படங்களில் நடித்தவர் அவுரத் என்ற ஹிந்தி படத்திலும் நடித்தார். சிவாஜி கணேசன், பத்மினி நடித்த பேசும் தெய்வம் படத்தில் இவரது கேரக்டர்தான் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 1968 ஆம் ஆண்டு ’குழந்தைக்காக’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு  தேசிய விருது கிடைத்திருந்தது. இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் மூன்றரை வயது தான்.

baby rani

இதனை அடுத்து டீச்சரம்மா,  கண்ணே பாப்பா, அடிமைப்பெண், பொண்ணு மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்தார். கண்ணை பாப்பா படத்தில் நடிக்கும் போது தான் சினிமாவில் நடிக்கிறோம் என்ற விவரமே அவருக்கு தெரிந்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அடிமைப் பெண் படத்தில் ஜெயலலிதாவுடன் நடிக்கும் போது அவரை அம்மா என்றுதான் கூப்பிடுவேன் என்றும் அவரை மட்டும் இன்றி பத்மினி, சாவித்திரி, போன்றவர்களுடன் நடித்தபோதும் அவர்களை அம்மா என்று தான் கூப்பிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் திருடன்,  ராமன் எத்தனை ராமனடி, ஆதிபராசக்தி,  திருமகள் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கு திரை உலகில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கை கேரக்டரில் நடித்திருப்பார். ஸ்ரீ கிருஷ்ண லீலா போன்ற படங்களில் நடித்த ராணி, 1982 க்கு பிறகு படங்களில் நடிப்பதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார். அதற்கு காரணம் அவரது திருமணம் தான்.

நடிகை பேபி ராணி 16 வயதில் இருக்கும் போது அவரது தாயார் உடல் நலக் குறைவு காரணமாக திருமணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அவர் தனது உறவினரை 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அவரை குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஏராளமான ரசிகர்கள் இன்னும் அவரை ஞாபகம் வைத்திருப்பார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...