வணிகம் சிறக்க இன்று எப்படி வழிபட வேண்டும்? பெண்கள் செய்யக்கூடாத அந்த 3 விஷயங்கள்!

நவராத்திரி 10ம் நாளான இன்று (24.10.2023) அன்று விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் நவராத்திரியின் நிறைவுப்பகுதியாக அதாவது வெற்றித்திருநாள் ஆகக் கொண்டாடப்படுகிறது.

அம்பாள் மகிஷாசூரனை வதம் செய்த நாள். இன்று விஜயா என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறாள். அதனால் தான் இந்த நாளுக்கு விஜயதசமி என்ற பெயர் வந்தது.

Vijayalakshmi
Vijayalakshmi

விஜயம் என்றால் வெற்றி. எல்லாருக்கும் தேவையானது வெற்றி. இன்று பால் பாயாசம், காராமணி சுண்டல், இனிப்பு வகைகள் நைவேத்தியமாக வைக்கலாம். வாசனை பூக்கள் எதுவாக இருந்தாலும் அதை வைத்து அர்ச்சிக்கலாம்.

இன்று அம்பிகையை வழிபடுவதால் வாழ்க்கையில் எதைத் தொட்டாலும் வெற்றி கிடைக்கும். 9 நாள்களும் சாமி கும்பிட முடியாதவர்களுக்கு இந்த நாள் அரிய வாய்ப்பு. இந்த 10வது நாளன்று அம்பிகைக்கு எந்த மலரானாலும் அதை சாத்தி பிடித்த நைவேத்தியம் வைத்து இன்று பிரார்த்தனை பண்ணி வழிபடலாம். நேற்று ஆயுத பூஜையைக் கொண்டாடியவர்கள் இன்று மறு பூஜை செய்வது சிறந்த பலனைத் தரும். புதிதாகத் தொழில் தொடங்கலாம்.

நாம் பயன்படுத்தக்கூடிய பொருள்களை வைத்து வருடத்திற்கு ஒருமுறை பூஜை செய்வது நல்லது. எந்தப் பொருள்களை வைத்து நமது வாழ்வாதாரம் நடைபெற்று வருகிறதோ அந்தப் பொருளுக்கு மரியாதை கொடுக்கும்போது நாம் வாழ்நாளில் இன்னும் ஒரு படி உயர்வோம் என்பதில் சந்தேகமில்லை.

வியாபாரம் செய்பவர்கள் முதலில் தாம் விற்கும் பொருளைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுத் தான் ஆரம்பிப்பார்கள். அதனால் குழந்தைகளுக்கும் இந்த தாத்பரியத்தை சொல்லிக்கொடுத்து வழிபடச் சொல்லுங்கள். அவர்களையும் இந்த வேலைகளை எல்லாம் தெரிந்த அளவு சொல்லிக் கொடுத்து செய்யச் சொல்லலாம்.

salt group
salt group

ஒருவருக்கு உணவு பரிமாறும் போது பெண்கள் சில நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும். உப்பு, நெய், அன்னம் இவை மூன்றையும் எந்த அவசரமாக இருந்தாலும் கையால் பரிமாறக்கூடாது. நிறைய வீடுகளில் கையால் தான் உப்பை எடுத்து பரிமாறுவர். இது தவறு. அதே போல் அவசரத்தில் சாதம் வைப்பவர்கள் கரண்டி கிடைக்கவில்லை என்றால் கையால் எடுத்துவிடக்கூடாது.

நெய்யும் அப்படித் தான். கை தீண்டி எடுக்கும் உப்பு, சாதம், நெய் இவை எல்லாம் கோமாமிசத்துக்குச் சமம். அதனால் தான் கையால் எடுத்துப் பரிமாறக்கூடாது. பரிமாறும் மற்றவர்களுக்கும் இந்த முறையைப் பின்பற்றுமாறு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கடையில் மாலை 6 மணிக்கு மேல் இந்த பூஜையை செய்து கொள்ளலாம். காலை கடையைத் திறக்கும் நேரமும் செய்து கொள்ளலாம். ராகு காலம், எமகண்டம் தவிர மற்ற நேரங்களில் பூஜை செய்து கொள்ளலாம்.

கடையில் உள்ள எல்லா ஊழியர்களுடனும் சேர்ந்து நைவேத்தியம் வைத்து அனைவரின் நலன் கருதியும் கடையின் வியாபாரம் நல்லா வரவேண்டும் என்பதற்காகவும் கடவுளை வேண்டி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

மைசூர் மற்றும் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெறுவதும் இன்று தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews