இசைப்புயலை அடையாளம் காட்டிய பிரபல விளம்பர இயக்குநர் : நன்றிக் கடனுக்காக ஏ.ஆர்.ரகுமான் செஞ்ச தரமான சம்பவம்

அப்போது இளையராஜா செம பிஸியாக இருந்த நேரம் அது. இயக்குநர் கே.பாலச்சந்தர் புதுப்புது அர்த்தங்கள் படத்தின் அனைத்துப் பணிகளையும் முடித்து பின்னணி இசைக்காக இளையராஜாவுக்காக காத்துக் கிடக்க கடைசியில் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதேபோல் தளபதி படம் ரீலீஸ் நேரம். மணிரத்னமும் இளையராஜாவின் இசைக்காக காத்துக் கிடக்க மீண்டும் கருத்து வேறுபாடு. இந்த முக்கோண மோதலே ஒரு புயலாக உருவெடுத்து அது இசைப்புயலாக இன்றுவரை இசை உலகை சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் சிகரம் கே.பி. தனது ‘கவிதாலயா’ நிறுவனத்திற்காக ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்று கேட்டு மணிரத்னத்தை சந்தித்தார். சந்தித்த நிமிடத்தில் அதனை ஒத்துக் கொண்ட மணிரத்னம் கதையைவிட, இசைக்கு யாரை அணுகுவது என்கிற தேடலில் மூழ்கிப் போனார்.

அவரை எப்போதும்போல் அன்றைக்கும் சந்திக்க வந்த அப்போதைய விளம்பரப்பட இயக்குநரான ராஜீவ்மேனன். ‘இந்த மியூஸிக்கை கேட்டுப் பாருங்க’ என்று சொல்லி ஒரு ஆடியோ கேஸட்டை மணிரத்தினத்தின் கையில் திணித்தார். அது ராஜீவ்மேனனின் ஒரு மூன்று நிமிட விளம்பரத்திற்கு ரஹ்மான் போட்டிருந்த இசை.

அந்த இசையைக் கேட்டுவிட்டு அதில் ஈர்ப்படைந்த மணிரத்னம், தொடர்ந்து ரஹ்மான் போ்ட்டிருந்த அனைத்து விளம்பர ஜிங்கிள்ஸ்களையும் வாங்கிக் கேட்டுப் பார்த்துவிட்டு, அப்போதே முடிவு செய்து கொண்டார் இவர்தான் தனது அடுத்த இசையமைப்பாளர் என்று.

ஒரு ஆட்டோவில் சாதுவாக வந்திறங்கிய அந்தப் பையனைப் பார்த்து ‘கவிதாலாயா’ நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள்கூட நம்பவில்லையாம். இவர்தான் நமது அடுத்தப் படத்தின் இசையமைப்பாளர் என்று..!

இளையராஜா எல்.ஆர். ஈஸ்வரியை ஒதுக்கிய காரணம் இதானா? இருந்தும் பாட வைத்த ஒரே ஒரு பாட்டு

ஆனால் அலுவலகத்தில் இருந்த ஒருவர் மட்டும் டேப்-ரிக்கார்டரில் அந்த இளைஞர் போட்டிருந்த விளம்பர இசையைக் கேட்ட மாத்திரத்தில் சந்தோஷமாக துள்ளிக் குதித்து சம்மதித்தார். அவர் ‘கவிதாலயாவின்’ தூணாக விளங்கிய  அனந்து. உலக சினிமாவின் சரித்திரத்தையும், கதைகளையும் விரல் நுனியில் வைத்திருந்த அந்த உன்னதப் படைப்பாளி, இந்த இசையமைப்பு வேறு ஒரு ரீதியில் தமிழ்த் திரையுலகைக் கொண்டு போகப் போகிறது என்பதை மிக எளிதாகப் புரிந்து கொண்டு புத்தம் புது இசையமைப்பாளருக்கு முழு ஆதரவு கொடுக்க. சங்கடமில்லாமல், கேள்வி கேட்காமல் கே.பி.யால் இது அங்கீகரிக்கப்பட்டது.

‘தளபதி’வரையிலும் வாலியுடன் இருந்த நெருக்கத்தை, அப்போதைக்கு முறித்துக் கொண்டு புதிதாக வைரமுத்துவுடன் கூட்டணி வைத்தார் மணிரத்னம். இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டவுடன் படத்தின் அனைத்துப் பாடல்களுமே இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப் போகிறது என்பதை கே.பி.யும், வைரமுத்துவும், மணிரத்தினமும் உணர்ந்தார்கள்.

‘ரோஜா’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை ‘சோழா ஹோட்டலில்’ நடந்தபோது பேசிய கே.பாலசந்தர், “இந்தப் படத்தோட இசையமைப்பாளர் ரஹ்மானை எனக்கு அறிமுகப்படுத்த மணிரத்னம் அழைத்து வந்தபோது, நான்கூட ஏதோ எனக்குத் தெரியாத வேற்று மொழிக்காரரையோ, அல்லது வயதான, திரையுலகம் மறந்து போயிருந்த ஒருத்தரையோ அழைத்து வரப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வந்தது இந்தச் சின்னப் பையன்தான். ஆனால் படத்தின் இசையைக் கேட்டபோது இது ஒரு புயலாக உருவெடுக்கப் போகிறது என்பதை இப்போது உணர்கிறேன். நிச்சயம் அதுதான் நடக்கப் போகிறது.” என்றார். அவருடைய வாக்கு அடுத்த சில வருடங்களில் நிஜமாகவே நடந்துவிட்டது.

என்னது இந்தப் பாட்டுக்கெல்லாம் இசையே கிடையாதா..? பின்னணி இசையே இல்லாமல் ஹிட் ஆன பாடல்கள்

வீட்டிலேயே சிறிய அளவில் ஸ்டூடியோ வைத்து அதில் விளம்பரப் படங்களுக்கு இசையமைப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்த ரஹ்மான், தனக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பை மிகக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இயக்குநர் சிகரத்தின் நிறுவனம் என்கிற பேனர். மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குநர். இவர்கள் இருவரின் நேரடி பார்வையில் தன்னை பட்டென்று பற்றிக் கொள்ளும் சூடமாக ஆக்கிக் கொண்டு ஜெயித்தது ரஹ்மானின் திறமைதான். ராஜீவ்மேனன் மட்டும் அன்றைக்கு அந்தச் சூழலில் ரஹ்மானைப் பற்றிச் சொல்லாமல் இருந்திருந்தால்..

வேறொரு இயக்குநரால் ரஹ்மான் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதை அவரால் பெற்றிருக்க முடியுமா..? ‘சின்னச் சின்ன ஆசை’ உருவாகியிருக்குமா..? அது இயக்குநரின் கற்பனையாச்சே..! யோசித்தால் நடந்தும் இருக்கலாம்., அல்லது நடவாமலும் இருக்கலாம் என்றுதான் என் மனதுக்குத் தோன்றுகிறது.

இந்த நன்றிக் கடனுக்காகத்தான் ஏவி.எம். நிறுவனம், தனது 150-வது படத்திற்கு ரஹ்மானை இசையமைப்பாளராக புக் செய்துவிட்டு, “யாரை இயக்குநராகப் போடலாம்?” என்று கேட்டபோது ரஹ்மான் தயங்காமல் கை காட்டியது ராஜீவ்மேனனை. தயக்கமே இல்லாமல் ஏற்றுக் கொண்டது ஏவி.எம். நன்றிக் கடன் தீர்க்கப்பட்டது. அத்திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று, ரஹ்மானுக்கே விருதுகளை வாரிக் கொடுத்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.